search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    எண்ணெய்பசை கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை
    X

    எண்ணெய்பசை கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

    • பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    • வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது.

    எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்களுக்கு வரக்கூடிய முதல் முக்கிய பிரச்சனை எண்ணெய் பசையான பொடுகு எனப்படுகிற ஆயிலி டாண்டிரஃப். டிரை டாண்டிரஃப் எனப்படுகிற வறண்ட பொடுகைக் கூட சுலபமாக சரி செய்து விடலாம். ஆனால், ஆயிலி டாண்டிரஃபை அத்தனை சுலபத்தில் சரி செய்ய முடியாது. இது இருக்கும்வரை தலையில் ஒருவித மோசமான வாடையும் அடிக்கும். எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், ரொம்பவும் நீளமாக கூந்தலை வளர்க்காமல் மீடியமான அளவில் வெட்டிக் கொள்வது பராமரிக்க சுலபமாக இருக்கும்.

    சாதாரணமாக வெளியில் நடக்கும் போதும், டூ வீலரில் பயணம் செய்கிற போதும் சுற்றுப்புற மாசும் தூசும் மிகச் சுலபமாக இவர்களது மண்டையில் படிந்து, ஆயிலி டாண்டிரஃபுக்கு வழி வகுத்து விடும். இந்த வகையான பொடுகு வறண்ட பொடுகு மாதிரி உதிராது என்பதால் இருப்பதும் தெரியாது. அடிக்கடி அலசி சுத்தப்படுத்தினால்தான் பொடுகு இன்றி பாதுகாக்க முடியும். இந்தப் பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். டெயில் கோம்ப் என்று கேட்டு வாங்கவும். அதன் கூரிய பின் பகுதியால் தலைமுடியில் பகுதி பகுதிகளாகப் பிரித்து, லேசாகச் சுரண்டவும். அப்போது பொடுகு இருந்தால் வெளியே வரும். இருப்பது தெரிந்தால் சிகிச்சை அவசியம்.

    வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் எண்ணெய் வைத்தே ஆக வேண்டும் என்றாலும், வைத்த சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். வெளியில் செல்லும் போது தலைமுடிக்கு ஸ்கார்ஃப் அவசியம்.

    * பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, தலையில் மிதமாக மசாஜ் செய்யவும். செம்பருத்திப் பூவின் விழுது 1 டேபிள்ஸ்பூன், வெந்தய விழுது கால் டீஸ்பூன், நெல்லிக்காய் விழுது கால் டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் கலந்து, எண்ணெய் மசாஜ் செய்த தலையில் தடவவும். அதையே கூந்தலின் இடையிலும் விட்டு விரல்களால் நீவி விடவும். அரை மணி நேரம் வைத்திருந்து சீயக்காய் அல்லது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் ஷாம்பு உபயோகித்து அலசவும்.

    * தயிரில் சிறிது பாதாம் ஆயில், 2 துளிகள் எலுமிச்சைச்சாறு, சிறிது வேப்பிலை விழுது, துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். தலையை அலசும்போதும் கவனம் அவசியம். முதலில் தலைமுடியை இட, வலப் பக்கமாக இரண்டாகப் பிரிக்கவும். இடப்பக்க முடியை நன்கு விரல்களை விட்டு சுத்தம் செய்து, நிறைய தண்ணீர் விட்டு அலசி சுத்தப்படுத்திய பிறகு, வலப்பக்க முடியையும் அதே போலச் செய்யவும். பிறகு மொத்த கூந்தலையும் மீண்டும் அலசவும். முதலில் வெறும் தண்ணீரில் இப்படி அலசிய பிறகு, சீயக்காயோ, ஆயில் கன்ட்ரோல் ஷாம்புவோ உபயோகித்து அலசி, வெயிலில் சிறிது நேரம் நின்று உலர்த்தவும்

    * ஒரு கைப்பிடி அளவு சீயக்காய், 3 பூந்திக் கொட்டை, கைப்பிடி அளவு குண்டு மல்லி ஆகியவற்றை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்தத் தண்ணீரை வடித்து, தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். எண்ணெய் பசை கட்டுப்படும். தலைமுடிக்கு இயற்கையான நறுமணமும் கிடைக்கும்.

    * 2 கைப்பிடி அளவு பன்னீர் ரோஜாவை எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிலுள்ள நிறமெல்லாம் போனதும் அந்த ரோஜாவை எடுத்து வேறு தண்ணீரில் போட்டு, கொஞ்சம் மரிக் கொழுந்தும் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள் இந்தத் தண்ணீரைக் கசக்கி, வடிகட்டி, தலையை அலச உபயோகிக்கலாம்.

    * தலைக்குக் குளித்ததும் அவர்கள் உபயோகிக்கிற சீப்பு, பிரஷ் போன்றவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

    * தலையைத் துவட்ட டர்கி டவல் உபயோகிக்காமல், கதர் டவல் உபயோகிப்பதே சிறந்தது.

    Next Story
    ×