

நமது பாரம்பரிய விசேஷங்கள், பண்டிகைகள் மற்றும் திருமண சுபகாரியங்கள் என்றாலே பெண்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கைகளில் மருதாணி வைப்பதுதான். கைகளில் மருதாணி எவ்வளவு அழகாக, அடர் சிவப்பாக பிடிக்கிறதோ, அவ்வளவு அழகாக அந்த விசேஷ நாளும் மாறும் என்பது ஐதீகம்.
மருதாணி அரைக்கும் போது.. இதை ட்ரை பண்ணுங்க..
மருதாணி இலைகளை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ போடுவதற்கு முன்பே, ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் இரண்டு பாக்கு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்றாக சிவக்கும்.
புளியில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை, மருதாணி இலையில் இருக்கும் 'லாசோன்' என்ற நிறமியை வேகமாக வெளிக்கொண்டு வர உதவுகிறது.
பாக்கில் உள்ள துவர்ப்புத் தன்மை, மருதாணியின் சிவப்பு நிறத்தை இன்னும் அடர்த்தியாகவும், பல நாட்களுக்கு மங்கிப் போகாமலும் நீடிக்கச் செய்கிறது.
மருதாணி டிசைன்கள்..
கைகளின் வடிவத்திற்கு ஏற்ப சரியான டிசைனைத் தேர்ந்தெடுப்பது மருதாணியின் அழகை மேலும் கூட்டும். அரபிக் டிசைன், மண்டலா ஆர்ட் டிசைன், நெகட்டிவ் ஸ்பேஸ் டிசைன் மற்றும் பிரைடல் பார்டர் டிசைன் ஆகிய டிசைன்களை கைகளுக்கேற்ப போட்டால் பிரம்மாண்டமான தோற்றத்தை நமக்கு தரும்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை..
மருதாணி கைகளில் காய்ந்தவுடன் அது உதிர்ந்து விடாமல் இருக்க, சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து மருதாணியின் மேல் தடவ வேண்டும். சர்க்கரை மருதாணியைக் கைகளில் ஒட்ட வைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு அதன் நிறத்தை இன்னும் ஆழமாக்குகிறது.
கடுகு எண்ணெய் மற்றும் தைலம்..
மருதாணியை முழுமையாகக் காய்ந்த பின் உதிர்த்து எடுத்துவிட்டு, கைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் பயன்படுத்தும் தைலம் அல்லது கடுகு எண்ணெயைக் கைகளில் நன்றாகத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது கைகளுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுத்து நிறத்தைக் கூட்டும்.
கிராம்பு புகை பிடிப்பது..
மருதாணியை உரிப்பதற்கு முன்பாக, ஒரு தவாவில் 4 முதல் 5 கிராம்புகளைப் போட்டு சூடாக்க வேண்டும். அதில் இருந்து வரும் புகையில் உங்கள் கைகளைக் காட்டினால், கிராம்பின் வெப்பம் மருதாணியின் நிறத்தை பல மடங்கு அடர்த்தியாக மாற்றும்.
தவிர்க்க வேண்டியவை..
மருதாணி வைத்தவுடன் கைகளை சோப்பு அல்லது குளிர்ந்த நீர் கொண்டு கழுவக்கூடாது. குறைந்தது 8 முதல் 10 மணிநேரம் தண்ணீர் படாமல் இருந்தால் நல்லது.
மருதாணியை வேகமாக உலர வைக்க "ஹேர் டிரையர்' போன்ற கருவிகளையோ அல்லது ஃபேன் காற்றிலேயோ ஆறவிடக்கூடாது. அது மருதாணியின் இயற்கையான நிறத்தைக் கெடுக்கும்.