ஹேர் டிரையர் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

ஹேர் டிரையரை தினமும் அல்லது தவறான முறையில் பயன்படுத்தினால் கூந்தலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும்.
Hair Dryer
Published on

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பெண்கள், ஆண்கள் குளித்து முடித்தவுடன் தலைமுடியை வேகமாக உலர வைக்கப் பலரும் ஹேர் டிரையர்களை பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாகப் பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இது மாறிவிட்டது. ஆனால், ஹேர் டிரையரைப் பயன்படுத்துவது தலைமுடிக்கு நல்லதா அல்லது கெட்டதா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது.

Hair Dryer

ஹேர் டிரையரால் ஏற்படும் நன்மைகள்..

அவசர காலங்களில் தலைமுடியை மிக விரைவாகக் காயவைக்க இது பெரிதும் உதவுகிறது. ஈரப்பதம் நீண்ட நேரம் தலையில் தங்குவதால் ஏற்படும் ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். மேலும், தலைமுடிக்கு நல்லவொரு பொலிவையும், விருப்பமான ஹேர் ஸ்டைலையும் செய்ய இது பயன்படுகிறது.

Hair Dryer

அதிகப் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்துகள்..

ஹேர் டிரையரை தினமும் அல்லது தவறான முறையில் பயன்படுத்தினால் கூந்தலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும். இதிலிருந்து வெளிவரும் அதிகப்படியான வெப்பம், முடியின் வேர்க்கால்களில் உள்ள இயற்கை ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சிவிடும். இதனால் தலைமுடி வைக்கோல் போல வறண்டு, நுனிகளில் வெடிப்பு ஏற்பட்டு, மிக எளிதாக உடைந்து கொட்டத் தொடங்கும்.

Hair Dryer

கூந்தல் சேதமடையாமல் டிரையரை பயன்படுத்தும் முறைகள்..

கூலிங் மோட் : ஹேர் டிரையரில் எப்போதும் 'Heat' ஆப்ஷனைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, 'Cool' அல்லது 'Medium' வெப்ப நிலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த காற்று முடியை சேதப்படுத்தாது.

பாதுகாப்பான இடைவெளி: டிரையரை தலைமுடிக்கு மிக அருகில் கொண்டு செல்லக் கூடாது. தலைமுடியில் இருந்து குறைந்தது 6 முதல் 8 இன்ச் தூரத்தில் வைத்தே பயன்படுத்த வேண்டும்.

ஈரமான முடியில் பயன்படுத்தக் கூடாது: குளித்து முடித்த உடனே சொட்டச் சொட்ட ஈரமாக இருக்கும் முடியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. முதலில் மென்மையான துண்டால் ஈரத்தை ஓரளவிற்குத் துடைத்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

ஹீட் புரொடெக்டிங் சீரம் : டிரையர் பயன்படுத்தும் முன்பாக, சந்தைகளில் கிடைக்கும் தரமான 'ஹீட் புரொடெக்டிங் சீரம் அல்லது ஸ்ப்ரே' தடவிக் கொள்வது வெப்பத்திலிருந்து முடியைப் பாதுகாக்கும் சிறந்த கவசமாகும்.

Hair Dryer

முக்கியம்..

ஹேர் டிரையர் என்பது ஒரு பயனுள்ள நவீனக் கருவி தான். ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே கூந்தலின் அழகையும் ஆரோக்கியத்தையும் நம்மால் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com