பாதவெடிப்பு உங்களை பாடாய்படுத்துகிறதா?.. தூங்குவதற்கு முன் இதை மட்டும் செய்யுங்க..

மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் வெடிப்புகளை ஆற்றும் கிருமிநாசினி..
 Cracked Heels Remedy
Published on

குளிர்காலம் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் பலரை வாட்டும் ஒரு முக்கிய பிரச்சனை பாதவெடிப்பு. இது பாதங்களின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், சிலருக்கு கடுமையான வலியையும், ரத்தக் கசிவையும் கூட ஏற்படுத்தும். பார்லருக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல், உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.

வெதுவெதுப்பான நீர் மற்றும் கல் உப்பு..

ஒரு அகலமான பாத்திரத்தில் கால்கள் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான சுடுநீரை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி கல் உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த நீரில் கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பின்னர், ஒரு மென்மையான பிரஷ் அல்லது பியூமிஸ் கல் கொண்டு பாதங்களை மெதுவாகத் தேய்த்துக் கழுவவும். இது இறந்த சரும செல்களை எளிதாக நீக்கிவிடும்.

மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் பேஸ்ட்..

2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு விளக்கெண்ணெய் சேர்த்து தடிமனான பேஸ்ட் போல கலந்துகொள்ளவேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன் இந்த பேஸ்ட்டை பாதவெடிப்பு உள்ள இடங்களில் நன்றாகத் தடவ வேண்டும். மஞ்சள் கறை படியாமல் இருக்க காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டும் தூங்கலாம்.

மஞ்சளில் உள்ள கிருமிநாசினி பண்புகள் வெடிப்புகளை விரைவாக ஆற்றும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகு..

இரவு தூங்கும் போது தூய்மையான தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம். வெடிப்பு அதிகமாக இருந்தால், சிறிதளவு மெழுகுவர்த்தி மெழுகை உருக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெடிப்புகளில் தடவினால் மிக விரைவான பலன் கிடைக்கும்.

பாதங்கள் எப்போதும் மென்மையாக இருக்க சிம்பிள் டிப்ஸ்..

  • வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது மட்டுமின்றி, வீட்டிற்குள்ளும் மென்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.

  • குளித்து முடித்தவுடன் பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போதே ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசர் அல்லது வேசலின் தடவினால் நன்றாக இருக்கும்.

  • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்; இது சருமம் வறண்டு போவதைத் தடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com