

சிறுவயதில் தாய் தங்களை எப்படி வளர்த்தாள் என்பதை பிள்ளைகள் அறிந்திருக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தங்களது குழந்தைகளை மனைவி எப்படி வளர்க்கிறாள் என்பதை பார்த்தே தாய்மையின் அர்ப்பணிப்பு வாழ்க்கையை உணர்வுபூர்வமாக உணரலாம். ஏழையாக இருந்தாலும், மாடமாளிகையில் வாழ்ந்தாலும் வசதி வாய்ப்பில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஏழைத்தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பும், பணக்கார தாயின் குழந்தை பாசமும் ஒரே அளவுகோலாகத்தான் வெளிப்படும்.
குழந்தையின் பசி போக்காமல் தான் உணவு உண்ண விரும்ப மாட்டாள். விளையாட்டு மோகத்தில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தாலும், விளையாட்டு காட்டியே சாப்பிட வைத்துவிடுவாள். குழந்தையின் பசி நீங்கினால்தான் நிம்மதி அடைவாள். தன் குழந்தை வாய் பேச முடியாதவனாகவோ, ஊனமுற்றவனாகவோ, உருவமே உருமாறி காட்சி யளிப்பவனாகவோ இருந்தாலும் முகம் சுளிக்காமல் அரவணைப்பு காட்ட தாயால் மட்டுமே முடியும்.
ஆறுதல் வார்த்தைகள் ஆயிரம் பேர் கூறலாம். ஆனால் உள்ளார்ந்த அன்பு தாயிடம் மட்டுமே உணர்வு பூர்வமாக வெளிப்படும். ஆறுதலோடு, அரவணைத்து துயரத்திலும், சந்தோஷத்திலும் துணை நிற்பாள். வசதி, வாய்ப்புகள் வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆனால் தாய்மை வெளிப்படுத்தும் பாசம் என்றென்றும் மாறாதது. எல்லா பிள்ளைகளிடமும் பாரபட்சம் காண்பிக்காமல் ஒரே மாதிரியாகவே வெளிப்படும். மனித பிறப்புக்கு மட்டுமல்ல உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே பிரதானம். அனைத்து உயிர்களிடமும் தாய்மை வெளிப் படுத்தும் பாசத்தில் பாகுபாட்டுக்கு இடமில்லை என்பதே நிதர்சனம்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டப்பட்டு வருகிறது. இன்றைய நாள் அன்னையின் அர்ப் பணிப்பு வாழ்க்கையை நினைவுகூரும் நாளாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. என்றென்றும் தாய்மையின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங் கள். குறிப்பாக முதுமை காலத்தில் அவர்களை உடன் வைத்து உபசரித்து, அன்பாக ஆறுதல் மொழி பேசி அரவணையுங்கள். வயோதிகம் அவர்களின் வாழ்க்கையை சுமையானதாகவோ, தனிமைப்படுத்துவதாகவோ கருத வைத்துவிடக்கூடாது. அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ரசித்து வாழ பக்கபலமாக இருங்கள்.