search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரை பொங்கல்
    X

    பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரை பொங்கல்

    • கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கல்.
    • பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக செய்யலாம்.

    பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்... நாம் சேர்க்கும் எவற்றை சேர்ப்பதில்லை என்ற ரெசிபி உங்களுக்காக...

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 1/4 கிலோ

    தேங்காய் - 4 முதல் 5 பத்தை

    முந்திரி - தேவைக்கேற்ப

    உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

    சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.

    அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.

    பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.

    இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!

    குறிப்பு : கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு சேர்க்க மாட்டார்கள். கட்டாயம் சேர்க்க வேண்டுமென விரும்பினால் தாராளமாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தற்போது கடைகளில் கிடைக்கும் வெல்லம் உப்பு சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான வெல்லம் கிடைக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் சாதம் வடிக்கும் போதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.. மேலும் சர்க்கரை பால் பொங்கலாக செய்ய விரும்புவர்கள் அரிசியை வெந்தது வடித்ததும் 1 கப் காய்ச்சிய பால் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.!

    Next Story
    ×