

சமீப காலமாக அனைவரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்புத் தேய்மானம். இதனை ஆங்கிலத்தில் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பது மிகப் பொருந்தும்.
அதாவது மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடையத் தொடங்கிவிடுகின்றன. மிக மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகள் பிற்காலத்தில் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் ஆளைக் கொல்லும் வலிமை உடையது.
முதுமையில் பொதுவாக 40 வயதைத் தொடும் பொழுது மனித எலும்புகள் தனது வலுவை இழக்கத் தொடங்கிவிடுகின்றன. இதனைத் தான் மருத்துவர்கள் எலும்புத் தேய்மானம் என்று பொதுவாக விளக்கம் அளிக்கிறார்கள்.
இது பொதுவாக பெரும்பாலும் பெண்களை அதிகமாக அவதிகுள்ளாக்கிவிடுகிறது. பெண்களில் 40 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஏற்படத் தொடங்கி அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிகத் தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திகிறது.
எலும்புகளுக்குத் தேவையான முக்கியமான ஒன்று கால்சியம் என்ற தாது உப்பு. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துகொள்ளும் தன்மை கொண்டுள்ளது. இந்த குணம் பொதுவாக நாம் முதுமையை நெருங்கும் பொழுது மெதுவாக மாறியும் மறைந்தும் போய்விடுவதால் எலும்புத் தேய்மானம் வருகிறது.
அதாவது முக்கியமாக பெண்களில் உதிரப்போக்கு நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.
எலும்பு முறிவு, மூட்டு வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், முதுகு வலி, உடல் சோர்வு, அசதி, முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு போன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தனது 40 வயது முதல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். நோய்களை குணப்படுத்துவதை விட எளிதாகத் தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.