என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கோடை வெயிலில் குளிர்ந்த பீர் குடிப்பதால் உடல் பாதிக்குமா?
    X

    கோடை வெயிலில் குளிர்ந்த பீர் குடிப்பதால் உடல் பாதிக்குமா?

    • கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும்.
    • உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.

    தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

    மற்ற மதுவகைகளை விட தற்போது குளிர்ந்த பீருக்கு தான் தேவை அதிகமாக உள்ளது. பார்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குளிர்ந்த பீர்களை வாங்கி குடிக்கிறார்கள்.

    வெயில் தாக்கத்திற்கு பீர் இதமாக இருப்பதாக கருதி பெரும்பாலான மதுபிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோடை காலத்தில் எப்போதுமே பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.

    பீர் குடிப்பதால் உடலுக்கு நல்லதா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மது குடிப்பது உடலுக்கு தீங்கானதாகும். இதனால் கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளாகி குடிப்பதால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.

    கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.

    மற்றொரு பாதிப்பு வயிற்றுப் பகுதியாகும். மது அருந்துவதால் வயிறு புண்ணாகி அதில் இருந்து ரத்தம் வரக்கூடும். 3-வதாக உடல் உறுப்பான கணையம் பாதிப்படையும். கணையம் பாதிக்கும் போது உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பல்ஸ் குறையும். இதனால் நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பாதிக்கும்.

    4-வது வகை மதுவுக்கு அடிமையாகுதல் ஆகும். தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களால் ஒரு நாள் கூட குடிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற மது போதைக்கு அடிமையானவர்கள் குடிக்காமல் விட்டு விட்டால் ஒரு வலிப்பு வரும்.

    திடீரென மதுபழக்கத்தை நிறுத்தும் போது இந்த பாதிப்பு ஏற்படும். இது மூளையையும் பாதிக்கும்.

    5-வது வகையான பாதிப்பு தொடர்ந்து மது குடிப்பதால் கை, கால், நரம்புகள் பாதிக்கும். கை, கால் பகுதி உணர்ச்சியற்றதாகி விடும். பாதம் எரியும் அல்லது மறத்து விடும். இது போன்ற பாதிப்புகள் குடியை நிறுத்த முடியாமல் தினமும் குடிப்பவர்களுக்கு ஏற்படும்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 10 முதல் 20 பேர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். இளம் வயதில் மது பழக்கத்திற்கு ஆளாகி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை தற்போது அதிகரித்து உள்ளது. பெண்கள் கூட சிலர் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுகிறார்கள்.

    கோடை காலத்தில் பீர் அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு நல்லது எதுவும் இல்லை. அவை குளிர்ச்சியும் கிடையாது. பீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு பாதிப்பு தான். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை விட பீரில் ஆல்கஹால் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

    பீர் தினமும் குடிப்பது பாதிப்பை உண்டாக்கும். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் இருதயத்திற்கு நல்லது.

    குறைவாக குடிக்கும் போது ரத்தக் குழாய் விரிவடையும். குளிர்ந்த பீர் குடிப்பதனாலும் எந்த நன்மையும் இல்லை. கோடை காலத்திற்கு என்றோ குளிர்காலத்திற்கு என்றோ பீரை வகைப்படுத்தக் கூடாது.

    எல்லா மதுபானங்களும் உடலுக்கு தீமைதான். ஆனால் பீர் வகைகள் அடிக்கடி எடுக்காமல் குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×