

மனித குடலில் சில நல்ல நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்வதாகவும், இந்த நல்ல நுண்ணுயிரிகள் குடலில் பெருகும் உணவுகளை அடிக்கடி உண்பது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த வகை உணவுகள் புரோபயாடிக் நுண்ணுயிரி உணவுகள் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில், மனித குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் சில பூஞ்சைகள் பெருக தயிர் மிகவும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை முக்கியமாக குடலில் வாழ்ந்து, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவுகின்றன.
தயிர் என்ற புரோபயாடிக் உணவு இந்த நல்ல நுண்ணுயிர்கள் குடலில் "கெட்ட" கிருமிகளின் வளர்ச்சியை குறைத்து, செரிமான சமநிலையை பராமரித்து, உணவு செரிமானம் ஆகி குடல் உறிஞ்சிகள் மூலம் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்பட்டு உடலில் சேர்வதை மேம்படுத்துகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று பாதிப்புகளை குறைக்க உதவுகின்றன.
தயிரில் காணப்படும் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் என்பவை லேக்டோபாசிலஸ் மற்றும் பைபிடோ பாக்டீரியா ஆகியவை அடங்கும். அவ்வப்போது உணவில் தயிர் சேர்த்து வரும் போது இந்த நுண்ணுயிரிகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்.
பொதுவாக, தயிரில் கால்சியம், வைட்டமின் டி, புரதம் நிறைந்துள்ளதால் எலும்புகள், பற்கள் வலுவாக இருக்க உதவும். தயிரில் உள்ள புரதம் தசை வளர்ச்சி, தசை வலுவுக்கு உதவுகிறது.
தயிரில் உள்ள நல்ல கொழுப்பு, ரத்த அழுத்தத்தை குறைக்க மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தயிரில் உள்ள வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை சருமத்தில் உள்ள முகப்பரு, தோல் அரிப்பு பாதிப்பை குறைக்க உதவுகிறது. வெயிலுக்கு தயிர் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஏராளமான நன்மைகள் உள்ளன.