search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கோடை விடுமுறையில் குழந்தைகள் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் வழக்கம் குறைந்து வரக்காரணங்கள்...
    X

    கோடை விடுமுறையில் குழந்தைகள் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் வழக்கம் குறைந்து வரக்காரணங்கள்...

    • குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடுவதால் உறவினர் வீடுகளுக்கோ, தாத்தா, பாட்டி வீட்டுக்கோ செல்ல விரும்புவதில்லை.
    • குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான முறையில் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.

    தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கங்கோ செல்கிறார்கள். இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    பொருளாதார பிரச்சினை

    கோடை விடுமுறையைக் கழிக்க அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காரைக்குடியை சேர்ந்த மல்லிகா கூறியதாவது:-

    கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும், பெற்றோர் மற்றும் தாத்தா- பாட்டி உறவுகளை பார்க்க வேண்டும். அவர்களுடைய அன்பைப் பெறவேண்டும், சந்தோஷமாக அவர்கள் தரும் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் அந்தமானில் இருந்து விமானத்தில் சென்னை வந்திருக்கிறோம். இங்கிருந்து சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று மீண்டும் வருவதாக இருந்தால் தனியாக ஒரு தொகையை செலவிட வேண்டியிருக்கிறது. பொருளாதார பிரச்சினை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பெரிய தொகையை செலவிட முடிவதில்லை. சொந்த ஊருக்கு வருவதாக இருந்தால் திருமணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தால் மட்டுமே வருகிறோம். விடுமுறையில் சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்துவிட்டது. சொந்த ஊருக்கு வந்து உறவுகளை பார்த்துவிட்டு திரும்பினால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பழைய கால நினைவுகளை அசை போடுவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் இயலவில்லை' என்றார்.

    வாணியம்பாடி புல்லூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன்:-

    பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று தங்கி வருவது கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப அதுவும் மாறுபட்டு வருகிறது. 15 நாள், 20 நாள் தங்கி இருந்தது கடந்த காலம் என்றால், தற்போது ஓரிரு நாட்கள் மட்டுமே உறவினர் வீடுகளில் தங்கி விட்டு செல்லும் நிலை உள்ளது.

    பொழுதுபோக்கு இடங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற பகுதிகளுக்கு செல்வதில் இளைஞர்களும், குழந்தைகளும், பெற்றோர்களும் தற்போது அதிக அளவில் விரும்புகின்றனர்.

    திருப்பத்தூரை சேர்ந்த டி.டி.சி. சங்கர்:-

    கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்பொழுது பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை வரும் என்று காத்திருந்து விடுமுறை விட்ட உடன் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தங்குவோம். தற்போது அனைவரும் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியதால் எங்கும் செல்வதில்லை. செல்போன், டி.வி. என முடங்கி கிடைக்கிறார்கள். அப்படியே அழைத்துச் சென்றாலும் அங்கு போர் அடிக்குது எனக்கூறி உடனடியாக வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். இதனை வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, பெற்றோர்கள் எடுத்துக் கூறி உறவினர்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்கள் வீட்டில் பழகும் விதம் ஏற்படும்.

    ஆன்லைன் விளையாட்டுகள்

    காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த ஆர்.சுந்தரராஜி:-

    ஒவ்வொரு ஆண்டும் முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் வீட்டில் உள்ள குழந்தைகள் ஊருக்கு செல்ல வேண்டும் தாத்தா, பாட்டியை பார்க்க வேண்டும் என்று முன்பு கூறுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. தற்போது செல்போன், கம்ப்யூட்டர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடுவதால் உறவினர் வீடுகளுக்கோ, தாத்தா, பாட்டி வீட்டுக்கோ செல்ல விரும்புவதில்லை. வீட்டில் உட்கார்ந்து பொழுதை கழிக்கவே விரும்புகிறார்கள். இப்போது உள்ள குழந்தைகள் செல்போனே உலகம் என மாறிவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும்.

    சத்துவாச்சாரியை சேர்ந்த ஆசிரியர் கணேசன்:-

    கோடை விடுமுறையில் குழந்தைகளை சுற்றுலா, சமூக நிகழ்வுகள், உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மூளையின் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பது அறிவியலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள், குழந்தைகளின் விளையாட்டு, பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான முறையில் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும்.

    குழந்தைகளை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதன் மூலம் தாத்தா, பாட்டிகளை அவர்கள் சந்திப்பார்கள். மேலும் கிராமத்து வாழ்க்கை, கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் தெரியவரும். தாத்தா பாட்டிகளிடம் இருந்து பெறப்படும் கடந்த கால அனுபவங்கள், வருங்கால செயல்களுக்கு அடித்தளமாகவும், வருங்கால சவால்களை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் உதவியாக இருக்கும்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் நாங்கள் விசாரிப்போம். கோடை விடுமுறை எவ்வாறு பயனுள்ளதாக கழித்தீர்கள் என்று. அதில் பலர் சொந்த ஊருக்கு சென்றதாக தெரிவிக்கின்றனர். ஆனால் சில பெற்றோருக்கு விடுமுறை இல்லாத காரணத்தினால் அவர்கள் குழந்தைகளை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில்லை.

    குழந்தைகள் தான் நமது உண்மையான சொத்து என்பதை பெற்றோர்கள் உணர்ந்து அவர்களுடன் சற்று நேரத்தை செலவிட வேண்டும்.

    பொருளாதாரம்

    திருவண்ணாமலையை சேர்ந்த இல்லதரசி தனலட்சுமி பாக்கியராஜ்:- நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோடை விடுமுறையின் போது நாங்கள் குடும்பத்துடன் திருப்பதி மற்றும் அருகில் உள்ள ஆன்மிக நகரங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவோம். இந்த ஆண்டும் கோடை விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க விரும்பப்படாமல் பொழுது போக்கிற்காக பூங்காவிற்கும், சுற்றுலா தலங்களுக்கு செல்ல விருப்பப்படுகின்றனர். மேலும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லவும் விருப்பப்படுகின்றனர். ஆனால் இதற்கு பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என்ற எண்ணமும் மந்தமாகி விடுகின்றது.

    இந்திய மருத்துவ சங்க ஆரணி கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன்:-

    மிகப் பெரிய பணக்காரராக இருந்தால் வெளி நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வார்கள். லட்சாதிபதியாக இருந்தால் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு செல்வார்கள், வசதி படைத்தவராக இருந்தால் தமிழகத்துக்குள் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள். வசதி இல்லாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோயிலுக்காவது சென்று பொழுது போக்குவார்கள். கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் சென்று கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு இன்றி பொதுமக்கள் பலரும் தவித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஆண்டுக்கு 2, 3 முறை சுற்றுலா செல்லக்கூடிய குடும்பங்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு சுற்றுலா செல்லும் பழக்கம் மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×