உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தி 4 கைகளுடன் 39 அடி உயர காலபைரவர் சிலை

இந்த சிலை உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.
39 அடி உயர பிரமாண்ட கால பைரவர் சிலை.
39 அடி உயர பிரமாண்ட கால பைரவர் சிலை.
Published on

கொடுமுடி :

காலபைரவர்...சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வடகிழக்குப்பகுதியில் நின்றகோலத்தில் காட்சி தருபவர். பன்னிரு கைகளுடன்,நாகத்தை பூணுலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசகயிறு,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் காட்சி தருபவர்.

கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள்,8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துப்பராகவும் கூறப்படுகிறது.

காசியில் கால பைரவருக்கு 8 இடங்களில் கோவில்கள் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காலபைரவர் கோவில் உள்ளது. பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காலபைரவருக்கு ஈரோட்டில் பிரமாண்ட சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் என்ற இடத்தில் ஸ்வர்ண பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் எங்கும் இல்லாத வகையில் நுழைவு வாயிலில் கோபுரத்துக்கு பதிலாக பிரமாண்ட காலபைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது.

இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டு ள்ளது. 4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மட்டும் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஸ்வர்ண ஹர்சன பைரவர் உள்ளார். அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயரமான இந்த கால பைரவர் சிலைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆனாலும் தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் காலபைரவரை காண திரண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த சிலை யுனிக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தக்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனை விருதை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் யுனிக் சாதனை புத்தகம் பஞ்சாப் அமைப்பின் தென்னக பொறுப்பாளர் ரகுமான் பைரவர் ஆலயத்தின் பொறுப்பாளரான விஜய்சுவாமியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கணேச முர்த்தி எம்.பி., மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com