search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்திரை தேர்த்திருவிழா:தங்க கருட வாகனத்தில் இன்று நம்பெருமாள் வீதி உலா
    X

    சித்திரை தேர்த்திருவிழா:தங்க கருட வாகனத்தில் இன்று நம்பெருமாள் வீதி உலா

    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்தார்.

    விழாவின் 4-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நண்பகல் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை (சனிக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×