பழனி முருகன் கோவில் தங்கரத புறப்பாடு கட்டண உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
பழனி முருகன் கோவில் தங்கரத புறப்பாடு கட்டண உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
Published on

பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு கட்டணம் உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.அதேபோல் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் உள்ளிட்ட வழிபாடு முறைகளிலும் கலந்துகொள்கின்றனர்.

இதில் தங்கரத புறப்பாடு என்பது பழனி முருகன் கோவிலில் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்ளும் நாளன்று மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யலாம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் குத்துவிளக்கு, முருகன் படம், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், பித்தளை விளக்கு, தேங்காய், பழம், லட்டு, பழனி தல வரலாறு, எவர்சில்வர் குடம் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவில் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்டம் தயாரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே தற்போதைய விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டு தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இதில் பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். 15-ந்தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த கட்டண சேவை தொடங்குவது குறித்து பக்தர்களிடம் கருத்து ஆலோசனை கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டண உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கரத புறப்பாடு 9 நிலைகளில் இருந்து 15 நிலைகளாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்கதேரை இழுக்கும் நேரம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் கட்டணத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்துவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com