search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாசிமக திருவிழா: நாகநாதசுவாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்
    X

    சுவாமி-அம்பாள் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்த போது எடுத்தபடம்.

    மாசிமக திருவிழா: நாகநாதசுவாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்

    • 6-ந்தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர்.
    • 8-ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

    திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே நந்தி கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவில் உள்ளது. சார மாமுனிவர், சிவபெருமானை வேண்டி தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம். நாக கன்னிகள் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் என்பதால் இங்குள்ள சிவனுக்கு நாகநாதர் என்ற திருநாம் அமைந்ததாக தலபுராணம் கூறுகிறது.

    இந்த கோவிலில் நாகநாதசுவாமியை வழிபட்டால் கால சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும் என்பது ஐதீகம். இத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் இந்திரவிமானத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, கடந்த 26-ந்தேதி கற்பகவிருட்சம், காமதேனு வாகனத்திலும், 27-ந்தேதி பூதவாகனம்-கமலவாகனத்திலும், நேற்று முன்தினம் கைலாச பர்வதம்-அன்னவாகனத்திலும் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    நேற்று ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாளும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 4 ரத வீதிகளில் சுவாமி-அம்பாள், 63 நாயன்மார்கள் வீதி உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் யானை வாகனம், பூப்பல்லக்கிலும் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) நந்தி-சிம்ம வாகனத்திலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) குதிரை வாகனத்திலும் சுவாமி-அம்பாள் எழுந்தருளுகின்றனர்.

    5-ந் தேதி காலை 7.08 மணிக்கு மேல் 8.50 மணிக்குள் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. 6-ந் தேதி மாசி மகத்தன்று காலை 11 மணிக்கு ஸ்ரீநடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல், காவிரி ஆற்றில் தீர்த்த வாரி நிகழ்ச்சியும் இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

    6-ந்தேதி அன்று இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். 7-ந் தேதி காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், அன்று இரவு விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். 8-ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், மாலை பிச்சாண்டவர் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.

    Next Story
    ×