

சிங்கம்புணரி அருகே சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி தேரோட்ட விழா நடந்தது. கடந்த 23-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. 28-ந் தேதி கழுவன் திருவிழா, 30-ந் தேதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் தன்னாயிரம், கவுரவ கண்காணிப்பாளர் மாணிக்கம் முன்னிலையில் சுரேஷ் குருக்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தினர்.
9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 5.30 மணியளவில் தேர் வடம்பிடித்தல் தொடங்கியது. முதல் தேரில் விநாயகர், 2-ம் தேரில் முருகன், 3-ம் தேரில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை அம்மன், 4-ம் தேரில் சண்டிகேஸ்வரர், 5-ம் தேரில் மீனாட்சி அம்மன் என 5 தேர்களில் உற்சவமூர்த்திகள் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் தேர் பவனி வந்து நிலையை அடைந்தது.
விழாவில் முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், கரு.கோபாலன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, கே.ஆர்.ஏ.ஜூவல்லர்ஸ் உரிமையாளர் நாகராஜன் குடும்பத்தினர், எஸ்.எஸ்.ஏ. குரூப்ஸ் சந்திரசேகர், செந்தில்குமார் மற்றும் நிறுவனத்தார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று பகல் ஊடல் உற்சவம், பட்டயம் வாசித்தல், மஞ்சள் நீராட்டம், இரவு பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் திருக்கோவிலை அடைந்து கொடி இறக்குதல், காப்புக்களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.