search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்திரையும் கைநீட்டமும்
    X

    சித்திரையும் கைநீட்டமும்

    • சித்திரை விசு பண்டிகை இன்று தடபுடலாக இல்லம் தோறும் கொண்டாடப்படுகிறது.
    • கோவில்களிலும் கனி காணல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான இன்றைய குமரி மாவட்டம் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த ஒரு பகுதியாகும். திருவிதாங்கூர் மன்னர்களின் உறைவிடமே (அரண்மனை) இந்த குமரி மாவட்டத்தில்தான் அமைந்திருந்தது. எனவே அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததாலும், மலையாள மொழி பேசும் மக்கள் குமரியில் அதிகமாக வசிப்பதாலும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் விஷூ பண்டிகை, பழமை மாறாமல் சித்திரை விஷூ பண்டிகையாக பன்னெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சித்திரை விசு

    அதன்படி சித்திரை விசு பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) தடபுடலாக இல்லம் தோறும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பூஜை அறைகளில் வயதான பெண்கள் அல்லது குடும்பத்தலைவிகள் மாக்கோலமிட்டு கனிகாணல் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ெசய்வார்கள். அதன்படி இன்று அதிகாலையில் கனிகாணல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதாவது ஒரு பெரிய நிலைக்கண்ணாடி முன்பு ஒரு பெரிய தாம்பாலத்தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், காய்கறிகள், கனிக்கொன்றை மலர்கள், புதிய பட்டுத்துணி, வெற்றிலை-பாக்கு, தேங்காய், வாசனைமலர்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைப்பார்கள். ராமாயணம் உள்ளிட்ட தெய்வீக புத்தகங்களும் வைக்கப்பட்டு இருக்கும். வெண்கல உருளிகளில் காசுகள் அல்லது ரூபாய் நோட்டுகள், பல்வேறு பாத்திரங்களில் அரிசி, உப்பு, சர்க்கரை மற்றும் தானியங்களையும் நிரப்பி வைத்திருப்பார்கள். நிலைக்கண்ணாடிக்கு தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டு இருக்கும். மேலும் கிருஷ்ணரின் சிலை அல்லது வண்ண ஓவியம் மற்றும் மயில் இறகு ஆகியவற்றையும் பூஜை அறையில் வைத்து விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.

    கனி காணல்

    இன்று அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே படுக்கை அறையில் இருந்து எழும் வயதான பெண்கள் அல்லது குடும்பத்தலைவிகள் கண்களை திறக்காமல் நேராக பூஜை அறைக்கு வந்து அங்கு முந்தைய நாள் இரவு படைத்து வைத்திருக்கும் கனிகளின் முன்பு கண்விழிப்பதுதான் கனி காணலின் சிறப்பாகும். கனிகண்டதும் குடும்பத் தலைவிகள், வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகள், குடும்பத்தினர் ஒவ்வொருவராக கண்களை கட்டி அழைத்து வந்து கனி காணச் செய்வார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் மங்களம் பொங்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும் என்பது ஐதீகமாகும்.

    கனி காணல் நிகழ்ச்சி முடிந்ததும் சிறுவர்களும், பெரியவர்களும் குளித்து, புத்தாடை அணிந்து வீடுகளில் அல்லது கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதனால் குமரி மாவட்டத்தின் அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதல் இரவு வரை குடும்பம், குடும்பமாகச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    கை நீட்டம்

    சித்திரை விஷூ பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கை நீட்டம் வழங்குவதும் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கமாகும். சித்திரை வந்தாள் பொருள் கோடி தந்தாள் என்று கூறும் வகையில் கை நீட்டத்தைப் பொறுத்தவரையில் அவரவர் வசதிக்கு ஏற்ப காசு, பணம் மற்றும் பொருட்களை கைநீட்டமாக வழங்குவார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர்- சிறுமிகள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள். அப்போது பெரியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பேரன், பேத்திகளுக்கும், உற்றார்- உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு வசதிக்கேற்ப தங்க காசுகள், தங்க நகைகள், வெள்ளிக்காசுகள், புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், காய்கறிகள், கொன்றைப்பூ, மலர்கள், அரிசி உள்ளிட்டவற்றை கை நீட்டமாக வழங்குவார்கள். மேலும் இந்த கை நீட்டம் சாதி, சமய, இன வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் காசு, பணங்கள், பொருட்களை பரிமாறிக்கொள்ளும் பழக்கமாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பது பெருமைக்குரியதாகும்.

    அறுசுவை விருந்து

    கோவில்களிலும் கனி காணல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் முடிந்ததும் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் கைநீட்டம் வழங்குவார்கள்.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் சித்திரை விஷூ அறுசுவை விருந்து இன்று தயாரிக்கப்படும். மதியம் அவரவர் வசதிக்கேற்ப வடை பாயாசத்துடன் அறுசுவை விருந்து தயாரித்து குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறுவது நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த விருந்தில் வாழ்க்கை கசப்பும், இனிப்பும் கலந்ததே என்பதை உணர்த்த வேப்பம்பூ, வெல்லம், மாங்காய் முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்திரை பச்சடியும் இடம்பெறும்.

    பழங்கள் விற்பனை படுஜோர்

    கனி காணும் நிகழ்ச்சிக்காக அதற்கு தேவையான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்க நேற்று மாலையில் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்தனர். இதனால் வியாபாரம் படுஜோராக இருந்தது.

    நாகர்கோவில் வடசேரி சந்தை உள்ளிட்ட இடங்களில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

    Next Story
    ×