search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கள்ளழகர் கோவில் சித்திரை விழாவுக்காக முகூர்த்தகால்கள் நடும் நிகழ்ச்சி
    X

    கள்ளழகர் கோவில் சித்திரை விழாவுக்காக முகூர்த்தகால்கள் நடும் நிகழ்ச்சி

    • முகூர்த்த கால்கள் நடும் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது.
    • 5-ந்தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்ததும், கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவிலின் சித்திரை. திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த ஜனவரி மாதம், கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாயபடி அன்று நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் கோவில் சித்திரை விழாவுக்கு கொட்டகை முகூர்த்த விழா நடந்தது. இதில் யாளி திருமுகத்திற்கு, நூபுர கங்கை தீர்த்தத்தினால் வேத மந்திரங்களுடன் பூஜைகள், அபிஷேகமும் நடந்தது. பின்னர் யாளி முகத்திற்கு சந்தனம், பூ மாலைகள், மாவிலைகள், சாத்தப்பட்டன. அதை தொடர்ந்து வர்ணம் பூசப்பட்ட மரத்தில் சந்தனம் பூசப்பட்டது.

    மேளதாளம் முழங்க அந்த முகூர்த்தகால்கள் எடுத்து செல்லப்பட்டன. மூலவர் சன்னதி முன்பாகவும், ராஜகோபுரம் முன்பாகவும் நடப்பட்டன.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், உள்துறை பேஷ்கார்கள் முருகன், புகழேந்தி, மற்றும் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து வைகை ஆறு தேனூர் மண்டபத்திலும் முகூர்த்தகால் நடப்பட்டது. மேலும் அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் வரை சுமார் 460-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளுவார்.இந்த மண்டபங்களின் முன்பாக பந்தல் அமைக்கும் பணிகள் நேற்றே தொடங்கி விட்டது.

    சித்திரைக்கு முத்திரை பதிக்கும் அழகர்கோவில் திருவிழா மே மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது. 2-ந் தேதி கோவிலிலே விழா நடைபெறும்.

    3-ந் தேதி இரவு 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் மதுரை நோக்கி புறப்படுகிறார். 4-ந் தேதி அதிகாலையில் மதுரை மூன்றுமாவடியில் எதிர் சேவை நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள். 6-ந் தேதி வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும்.

    7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 8-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லுதல், அன்றிரவு அப்பன் திருப்பதி விழா, 9-ந் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி அழகர் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருதல் நடைபெறும்.. 10-ந் தேதி உற்சவசாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×