search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அம்மை நோய் தீர்க்கும் நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில்
    X

    அம்மை நோய் தீர்க்கும் நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில்

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய ஆலயமாக நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முற்காலத்தில் வாழ்ந்த கவுரவ குல கவரை செட்டியார்கள் குதிரை மீது வளையல் வைத்து நாள்கணக்கில் பல ஊர்களுக்கும் சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சக்தி திருத்தலமான சமயபுரத்தில் பங்குனி பெருவிழாவில் வணிகம் செய்தனர்.

    கனவில் வந்த அம்மன்

    அப்போது ஒரு நாள் அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் சமயபுர மாரியம்மன் இளம் பெண் வடிவத்தில் தோன்றி தனது கைகளுக்கு வளையல் அணிவிக்க கூறினார். பெரியவரும் மகிழ்ந்து அப்பெண்ணின் பொன்நிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். அப்போது வளையல்கள் உடைந்து கீழே விழுந்தன.

    இதனால் அவர் செய்வதறியாது திகைத்து "அம்மா உன் அழகிய கைகளுக்கு போட வளையல்கள் என்னிடம் இப்போது இல்லை. என் ஊருக்கு வந்தால் வகை, வகையாக வளையல்களை அணிவித்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு அம்மன் வடிவில் இருந்த பெண் சிரித்து மறைந்தாள்.

    அம்மை நோய்

    தெய்வத்தாயை கனவில் கண்ட அந்த பெரியவர் விழித்து எழுந்தபோது அவருடன் வந்தவர்களை அம்மை நோய் தாக்கி இருந்தது. இதைக்கண்டு அந்த பெரியவர் மனம் வருந்தினார். அப்போது அங்கு வந்த சமயபுரம் கோவில் அர்ச்சகர் அந்த பெரியவரிடம் உடைந்த அவரது வளையல்களுக்கு பதிலாக பொற்காசுகளை அளிக்க அம்மன் உத்தரவிட்டதாக கூறினார்.

    மேலும் அம்மை நோய் தாக்கியவர்களுக்கு அன்னையின் அருட்பிரசாதமாக திருநீறு வழங்கினார். இந்த திருநீறை தங்கள் உடலில் அவர்கள் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்தது.

    சமயபுரம் மாரியம்மன்

    அப்போது தனது கனவில் வந்த பெண் சமயபுரம் மாரியம்மன் என்ற உண்மை முதியவருக்கு புலப்பட்டது. இதைக்கேட்ட சக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கும்(சக வியாபாரிகளுக்கும்) அன்னை காட்சி அளிக்க வேண்டும் என கேட்டு சமயபுரம் அன்னையை மனமுருகி வேண்டினர்.

    அப்போது ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தோன்றி பக்தா்களுக்கு காட்சி தந்தார், மாரியம்மன். தங்களது தாய் ஆகாயத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஆகாச மாரி... ஆகாச மாரி..." என போற்றிப் புகழ்ந்து வணங்கி துதித்தனர்.

    வசந்த கால வைபவம்

    இதைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் ஆகாச மாரியம்மனை தங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதை கேட்ட அம்மன் உங்கள் ஊர் எது? என(தனக்கு தெரிந்தும் தெரியாதது போல) கேட்டார். அப்போது வளையல் வணிகர்கள் தங்கள் ஊர் நறையூர்(நாச்சியார்கோவில்) என கூறினர். உடனே மாரியம்மன் தான் முல்லைக்கும், மல்லிகைக்கும், முன்கை வளையலுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன்" என கூறினார்.

    இதன்படி ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசைக்குப்பின் வரும் வெள்ளிக்கிழமை இரவில் சமயபுரத்தில் இருந்து ஆகாச மார்க்கமாக நறையூர் என்ற நாச்சியார்கோவிலுக்கு வருகை தந்து வசந்த கால வைபவம் கண்டு, அங்கு தேரோடும் திருவீதியின் ஈசான்ய பாகத்தில் கோவில் கொண்டு, அலங்கார வல்லியாக காட்சி தருகிறார் சர்வசக்தி ஆகாச மாரியம்மன்.

    ராஜராஜேஸ்வரி அம்மன்

    நிறைமங்கல நாயகியாக குறைதீர்க்கும் தெய்வமாய் அரசாட்சிக் கோலம் கொண்ட அன்னை, தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும், எல்லா பரம்பொருளும் தன்னுள் அடக்கம் எனக் காட்டவும், ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு அலங்காரத்தை ஏற்று காட்சி அளிக்கிறார்.

    அன்னையின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துக்கு வெண்பட்டு சேலை பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. அன்று இரவு அன்னையின் அருட்திறம் காட்டும் நீரில் விளக்கு எரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சனிக்கிழமை ஏக இறைவி ஏகாந்த வைபவமும், ஞாயிறு அன்று பெரிய திருவிழா கண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்களின் பாவங்களை களைந்து, உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளித்து, தீராத வினைகள் தீர்த்து சகல பாக்கியங்களையும் அருளுகிறார்.

    வேறு விழாக்கள் இல்லை

    திருநறையூரில் திருவிழா நாட்களில் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படிகள், அதற்கான பிரத்யேக பிரசாத படையல்கள், கனி வர்க்கங்கள், காணிக்கை சீர்வரிசைகள், பெருமாலை சாத்துபடி, கூட்டு வழிபாடு நடக்கிறது.

    நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் சாம்பிராணி புகையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, பலவகை காவடிகள் எடுத்து அங்கப்பிரதட்சணம், மாவிளக்கிடல் என பல வகை வழிபாடுகளை செய்கிறார்கள். சமயபுரம் மகா மாரியம்மன் நாச்சியார் கோவிலுக்கு வசந்த விழா காண வரும் நாட்களில் வேறு எந்த விழாவையும் அவ்வூரில் மக்கள் நடத்துவது இல்லை.

    அகல் விளக்கு சுடர்

    விழா நாட்களில் அம்மன் 6 நாட்கள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து வரும் புதன்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடக்கிறது. சமயபுரம் மாரியம்மன் இந்த கோவிலில் குடி கொண்ட அடையாளமாக கோவிலில் பேரகல் விளக்கின் சுடர் 24 மணி நேரமும் காட்சி அளிக்கிறார்.

    பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற நாச்சியார்கோவிலுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆலயத்துக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நடக்கிறது.

    சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுதல்

    27-ந் தேதி(சனிக்கிழமை) வீற்றிருந்த திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார் 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரம், 29-ந் தேதி(திங்கட்கிழமை) சரஸ்வதி அலங்காரமும், 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மதன கோபால அலங்காரமும், 31-ந் தேதி(புதன்கிழமை) மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், ஜூன் 1-ந் தேதி(வியாழக்கிழமை) ஸ்ரீ சேரசயன அலங்காரம், 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அம்பாள் அந்தம் வரை வளர்ந்தும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் காட்சி அளிக்கிறார்.

    அன்று இரவு அருள் தீபம் ஏற்றுதல் நடக்கிறது. 3-ந் தேதி(சனிக்கிழமை) ஏகாந்த வைபவம் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளிக்கிறார். 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை செய்கிறார்கள்.

    5-ந் தேதி(திங்கட்கிழமை) மற்றும் 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருகிறார். நின்ற திருக்கோலத்தில் வெள்ளி குடம் சுமந்தவாறு சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுகிறார். 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்தை அடைந்து அங்கிருந்து திருவாரூர் மார்க்கத்தில் 10 கி.மீட்டர் தூரம் பயணித்தால் நாச்சியார்கோவிலை அடைந்து ஆகாச மாாியம்மன் கோவிலை அடையலாம். இதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    Next Story
    ×