வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கம்?

ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.
வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கம்?
Published on

புதுடெல்லி:

லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியால் ஐ.சி.சி. போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

11 பேர் கொண்ட அணியில் அஸ்வினை சேர்க்காதது மற்றும் இந்திய வீரர்கள் செயல்பாடு போன்றவற்றால் அவரும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள்.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து கேப்டன் பதவியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது. ஐ.சி.சி.யின் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டில் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயதாகிவிடும். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருட சுழற்சி முழுவதிலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் நீடிப்பாரா? என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது.

வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங் நிலையை தேர்வுக் குழு பார்க்கும் என்று நம்புகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும். அதன் பிறகு டிசம்பர் இறுதி வரை டெஸ்ட் இல்லை. எனவே தேர்வுக்குழுவினர் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் உள்ளது.

இவ்வாறு அந்த நிர்வாகி கூறியுள்ளார்.

ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.

36 வயதாகும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூா் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. கேப்டன் பதவியில் 7 டெஸ்டில் 390 ரன்கள் எடுத்துள்ளார்.

சராசரி 35.45 ஆகும். கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com