

ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற கருத்தரங்கம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைரமுத்துக்கு பா.ஜனதா தலைவர் எச்.ராஜா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வைரமுத்து, தனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
என்றாலும் தொடர்ந்து வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்டதால் அதை ஏற்றுக் கொள்வதுதான் பண்பாடு என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளிநாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்பதும், அவரை மன்னிப்பதும் பண்பாடு.
தமிழுக்கும், இலக்கியத்துக்கும் திரைப்பாடலுக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர். அவர் படைத்த “மரங்கள்” கவிதை வனங்களின் தேசிய கீதம். அவரது விளக்கத்தை ஏற்போம். கண்ணியம் காப்போம்.
இவ்வாறு கூறியுள்ளார்.