சாத்தான் தீ டார்க் விமர்சனம்
சாத்தான் தீ டார்க் விமர்சனம்(2 / 5)
பல வருடங்களுக்கு பிறகு ஒரு கிராமத்தில் மர்மமான மரணங்கள் தொடர, அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயலும் காவல்துறை அதிகாரி, பல அதிர்ச்சிகரமான உண்மைகளை சந்திக்கிறார். இதே நேரத்தில், நாயகி ஐராவின் அம்மா விசித்திரமாக நடந்து கொள்வதும், நாயகனுக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவதும் கதையை திகில் பாதையில் நகர்த்துகிறது. இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்துள்ள எஃப்.ஜெ, தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் நடித்து இருக்கிறார். நாயகியாக ஐரா, பயமும் பதட்டமும் கலந்த காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் மோன பத்ரே. ஆவி பிடித்த பெண்ணாக அவரது நடிப்பு சில காட்சிகளில் உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்துகிறது. கிளைமாக்ஸ் பகுதியில் வரும் சாந்தினி தமிழரசன், குறைந்த காட்சிகளில் இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் சேர்க்கிறார்.
இயக்கம்
சாத்தான் வழிபாடு, நரபலி, அமானுஷ்ய சம்பவங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம். ஆரம்பம் முதல் பல விஷயங்கள் தெளிவில்லாமல் நகர, பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் பகுதியில் சில பதில்கள் கிடைத்தாலும், முழு விளக்கம் இல்லாமல் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டமாக முடிவடைகிறது. பயமுறுத்தும் காட்சிகள் மற்றும் கருத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அதை தெளிவாக சொல்ல தவறியிருக்கிறார்.
ஒளிப்பதிவு
பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு, ஒரு வீடு மற்றும் குறைந்த இடங்களை வைத்து அச்சத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறது.
இசை
அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை திகில் உணர்வை அதிகரிக்கிறது. ஆனால் சில இடங்களில் அதிக சத்தம் குறையாக தெரிகிறது.

