த்ரிஷ்யம் 3 – திரைவிமர்சனம்
த்ரிஷ்யம் 3 – விமர்சனம்(3 / 5)
வருண் பிரபாகரன் காணாமல் போன வழக்கில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றி அமைதியாக வாழ்ந்து வரும் ஜார்ஜ்குட்டி, இந்த முறை மீண்டும் கடந்த காலத்தின் நிழல்களால் சிக்கிக்கொள்கிறார். மூத்த மகள் அஞ்சுவின் திருமண ஏற்பாடுகளில் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், பழைய வழக்குடன் தொடர்புடைய பலரும் மீண்டும் களமிறங்குகிறார்கள்.
வருண் பிரபாகரன் வழக்கை மீண்டும் திறக்க முயற்சிகள் நடக்க, ஜார்ஜ்குட்டி குடும்பத்தை சுற்றி சந்தேகங்களும், பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. மறுபக்கம் பழைய பகைகள் ஒவ்வொன்றாக உயிர்ப்பெடுத்து அஞ்சுவை நெருங்க, இந்த முறை ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், வருண் பிரபாகரன் வழக்கின் இறுதி என்ன ஆனது என்பதே ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் மீதிக்கதை.
ஜார்ஜ்குட்டியாக நடித்திருக்கும் மோகன்லால், இந்த முறையும் முழுக்க முழுக்க தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். அமைதியாக பேசும் காட்சிகளிலும், குடும்பத்திற்காக உடைந்து போகும் தருணங்களிலும் அவரது நடிப்பு மிரட்டல். குறிப்பாக கண்களில் தெரியும் பதட்டம் மற்றும் குற்ற உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜார்ஜ்குட்டியின் மனைவியாக நடித்திருக்கும் மீனா, வழக்கம்போல் இயல்பான நடிப்பின் மூலம் எமோஷனல் காட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்களாக வரும் நடிகர்களும் கதையின் பதட்டத்தை நன்றாக கடத்தியிருக்கிறார்கள்.
முதல் இரண்டு பாகங்களை விட இந்த முறை உணர்வுகளுக்கும், மன அழுத்தத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். வழக்கமான திரில்லர் பாணியில் மட்டும் இல்லாமல், குடும்ப உறவுகள், குற்ற உணர்வு மற்றும் மனநிலைகளை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், அதற்குள் பல சஸ்பென்ஸ்களை அமைதியாக விதைத்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் ஒவ்வொரு திருப்பமும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. சில இடங்களில் திரைக்கதை நீளமாக தோன்றினாலும், கிளைமாக்ஸ்க்கு பிறகு அது பெரிய குறையாக தெரியவில்லை.
சதீஷ் குருப் ஒளிப்பதிவு, மலைப்பகுதி மற்றும் இரவு நேர காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. அனில் ஜான்சனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளுக்கு இவரது இசை உயிர் கொடுத்து இருக்கிறது.

