மெர்சல் சம்பளபாக்கி விவகாரம் - மேஜிக் நிபுணர் தொலைபேசி உரையாடலை வெளியிட்டதால் பரபரப்பு

‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனக்கு சம்பளபாக்கி வைத்திருப்பதாக மேஜிக் நிபுணர் ராமன் சர்மா தொலைபேசி உரையாடலை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Mersal #ThenandalFilms
மெர்சல் சம்பளபாக்கி விவகாரம் - மேஜிக் நிபுணர் தொலைபேசி உரையாடலை வெளியிட்டதால் பரபரப்பு
Published on

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

மெர்சல் படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய் ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் நிபுணராக வருவார். ஒரு காட்சியில் மேஜிக் மூலமாக சண்டையிடுவது போல படமாக்கி இருப்பார்கள்.

இந்த சண்டைக்காட்சி உள்பட மேஜிக் தொடர்பான காட்சிகளில் பணிபுரிந்தவர் சர்வதேச மேஜிக் நிபுணர் ராமன் சர்மா. ‘மெர்சல்’ படத்தில் இன்னும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை உருவாக்கி உள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் உரையாடலையும் ஸ்கிரீன் ஷாட்டாக வெளியிட்டார். இவரது இந்த பதிவு ட்விட்டரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேனாண்டாள் பிலிம்ஸ்: நான் தான் தயாரிப்பில் இருக்கிறேன்.

ராமன் சர்மா: ஏன் நிறுவனத்திலிருந்து என்னைக் கூப்பிட்டு பேச முடியாதா?

தேனாண்டாள் பிலிம்ஸ்: இன்னும் சில நாட்களில் பணம் உங்களுக்கு வந்துவிடும்.

ராமன் சர்மா: இன்னும் பல தரப்புக்கு பணம் பாக்கி என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேனாண்டாள் பிலிம்ஸ்: எல்லோருக்கும் பணம் தரப்படும்.

ராமன் சர்மா: இன்னும் இரண்டு நாட்கள் தான் காத்திருப்பேன். பணம் வரவில்லையென்றால் நான் வீடியோ பதிவை வெளியிட்டு விடுவேன்.

இவ்வாறு அந்த தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ளது.

தனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என்ற அதிருப்தியில் இந்த வீடியோ பதிவை ராமன் சர்மா வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இப்பிரச்சினையை முதலில் முடிக்குமாறு தேனாண்டாள் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெர்சல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு உலகம் முழுக்க சுமார் 100 கோடியை தாண்டி வசூலித்தது. #Mersal #Vijay #ThenandalFilms #RamanSharma

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com