Movie Review | யூத்- திரை விமர்சனம்
யூத்- திரை விமர்சனம்(3 / 5)
சென்னையில் பேக்கரி நடத்தி வரும் சுராஜ், மனைவி தேவதர்ஷினி மற்றும் மகன் கென் உடன் வாழ்ந்து வருகிறார். படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும் கென், பள்ளியில் ஒரு பெண்ணை காதலித்து கல்லூரி, வேலை, கல்யாணம் என்று செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரை எந்த பெண்ணும் காதலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் படிக்கும் மீனாட்சி தினேஷை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவரும் காதலிக்க இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
சில நாட்களில் மீனாட்சி தினேஷ் ஊருக்கு செல்ல, இடைப்பட்ட நாட்களில் மற்றொரு பெண்ணான பிரியான்ஷி கென்னை காதலிக்க ஆரம்பிக்கிறார். கென்னும் அந்த பெண்ணுடன் பழகி வருகிறார். இது ஒரு கட்டத்தில் மீனாட்சி தினேஷுக்கு தெரிய வந்து கென்னை விட்டு பிரிகிறார். பிரியான்ஷியின் காதலும் பொய் என்று கென்னுக்கு தெரிய வருகிறது.
இறுதியில் காதல் தோல்விகளை பார்த்த கென் வாழ்க்கை என்ன ஆனது? படிப்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ், இளைஞனின் அலட்சியம், கோபம், உணர்ச்சி, பின்னர் வரும் பொறுப்பு ஆகிய மாற்றங்களை இயல்பாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் நல்ல முன்னேற்றம். குறிப்பாக நடனத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கென் தந்தையாக வரும் சுராஜ், நடிப்பில் கண்கலங்க வைத்து இருக்கிறார். தாய் தேவதர்ஷினி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
இயக்கம்
இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள் மற்றும் அதில் இருந்து வரும் மாற்றங்களை சொல்ல முயற்சிக்கும் எளிய கதையாக ‘யூத்’ அமைந்துள்ளது. பெரிய புதுமை இல்லாவிட்டாலும், இளம் தலைமுறையை குறிவைத்து உருவாக்கப்பட்ட சிறப்பான படம்.
நடிகராக முத்திரை பதித்த கென், இயக்குநராகவும் முத்திரை பதித்து இருக்கிறார். மாணவர்கள் ஜாலி, காதல் என்று இருந்தாலும், படிப்பு, பெற்றோர்கள் ரொம்ப முக்கியம் என்று அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.
இசை
ஜிவி பிரகாஷ் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் இளைய தலைமுறை சூழலுக்கு ஏற்றபடி இருக்கிறது.
ஔிப்பதிவு
பிரகாஷ், செல்வம், விக்னேஷ்வரன், ஒளிப்பதிவு சாதாரணமாக இருந்தாலும், காட்சிகள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

