Kenatha Kaanom | மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் - யோகி பாபு

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் இயக்குநர் காலமானார்.
Kenatha Kaanom | மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் - யோகி பாபு
Published on

நடிகர் யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் யோகி பாபு பேசும் போது, “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற தரமான தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்; இவர் தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன்,” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com