இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம், அதன் பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் எதிர்பாராத பாக்ஸ் ஆபீஸ் தோல்வி காரணமாக இன்றும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது. இந்நிலையில், அந்தப் படத்தின் தோல்விக்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பற்றி படத்தின் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (நடராஜ்) சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து நடிகர் நட்டி பேசுகையில். புலி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் சார் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். நான் இதுவரை எனது ரசிகர்களுக்காகப் பல படங்களில் பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். ஆனால், 8 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக ஒரு படம் கூட பண்ணவில்லை என்றார். ஆமை, தவளை, காகம் ஆகியவை பேசும் இந்த விசித்திரக் கதை அவரைக் கவர்ந்தது. ஆங்கில படமான 'வில்லோ 1988' படத்தின் பாணியில் குழந்தைகளைக் குறிவைத்துத் தான் புலி படம் எடுக்கப்பட்டது' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த படம் ரிலீஸ் ஆகும்போது, போட்ட பட்ஜெட்டை எடுக்க வேண்டும் என்பதற்காக அதை ஒரு மாஸ் ஆக்ஷன் படம் போல விளம்பரப்படுத்தி விட்டார்கள். அதற்குப் பதிலாக, 'குழந்தைகளுக்கான படம்' என்று விளம்பரம் செய்திருந்தால், குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்திருப்பார்கள். படம் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும். தவறான விளம்பரமே படத்தின் தோல்விக்குக் காரணம்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அப்போது சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பெரிய தமிழ் படம் 'புலி'. தியேட்டர்களில் எதிர்பார்த்த லாபம் தராவிட்டாலும், சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலம் இந்த படம் போட்ட முதலீட்டை எடுத்தது.
இப்படத்தில் ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். குறிப்பாக, நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த தமிழ் படம் என்பதோடு அவரின் கடைசி தமிழ் படமாகவும் இது அமைந்துவிட்டது.