

கேரள மாநிலம் திருச்சூர் முண்டதிக்கோடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகர் மம்மூட்டி, "திருச்சூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய உளமார பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஏப்ரல் 21) பிற்பகலில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவிற்கான பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்புக் கிடங்கில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. சுமார் 2,000 கிலோகிராம் மதிப்பிலான வெடிபொருட்கள் அந்த வளாகத்தில் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வெடிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மீட்புக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.காயம் அடைந்தவர்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.