தி மம்மி (2026)– திரை விமர்சனம்
தி மம்மி (2026)– விமர்சனம் (3 / 5)
எகிப்தில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் ஜாக், தனது மனைவி மற்றும் 8 வயது மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள், பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் அவரது மகளை கடத்திச் செல்கிறார். அதன் பிறகு அந்த குழந்தைக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் ஆண்டுகள் கடக்கிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு விமான விபத்தில் கிடைக்கும் ஒரு பெட்டிக்குள், காணாமல் போன அவரது மகள் உயிருடன் கிடைக்கிறார். ஆனால் அவள் இயல்பான நிலையில் இல்லாமல், மர்மமான மாற்றத்துடன் இருப்பது தெரிய வருகிறது. தனது மகளை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு கொண்டு வர முயலும் பெற்றோர், அதன் பின்னர் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மகளாக நடித்திருக்கும் குழந்தை நடிகையின் நடிப்பு படத்தின் முக்கிய பலம். அவரது உடல் மொழி, பார்வை, அசைவுகள் அனைத்தும் பயமூட்டும் வகையில் அமைந்துள்ளது. பெற்றோராக வரும் கதாபாத்திரங்களும், பதட்டம் மற்றும் பயத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
மம்மி படங்கள் என்றாலே பொதுவாக சாகசம் மற்றும் பிரமாண்ட காட்சிகள் நினைவிற்கு வரும். ஆனால் இந்த படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, முழுக்க ஹாரர் பாணியில் நகர்கிறது. இயக்குனர் லீ க்ரோனின், குடும்ப உணர்வுகளுடன் கலந்த ஒரு இருண்ட ஹாரர் அனுபவத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார்.
படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், கதையின் சூழ்நிலை உருவாக அதுவே உதவுகிறது. பின்னர் வரும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஹாரர் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
ஒளிப்பதிவு மற்றும் இசை
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்தின் மனநிலையை உயர்த்துகிறது. இருண்ட காட்சிகள் மற்றும் அமைதியான பின்னணி இசை, suspense உணர்வை உருவாக்குகிறது.
அதே நேரத்தில், சில காட்சிகள் மிகவும் கொடூரமாகவும், பார்க்க சிரமமாகவும் உள்ளது. இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய படம் அல்ல. குறிப்பாக குழந்தைகளுடன் பார்க்க முடியாத படம்.
மொத்தத்தில், தி மம்மி ஒரு முழுக்க ஹாரர் அனுபவம் தரும் படம். வழக்கமான மம்மி படங்களை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இது மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.

