

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த உஸ்தான் பகத் சிங் திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நல்லா நாகப்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார்.
படம் ரிலீசுக்கு முன் ஐதராபத்தில் பட நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்துகொண்டு பேசியபோது, தான், ஒரு நாயுடு பையன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது’என்று கூறினார். தனது சாதி குறித்து பார்த்திபன் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதன்பின் பார்த்திபன் இப்படி பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில் இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.
இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காதுஎன்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை பெற முயன்று வருவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில்,
"சாதியில்லை மதமில்லை என்று மனதளவில் உறுதியாய் இருப்பவன் நான். இருந்தாலும் இடையில் அதற்கொரு சோதனை ஏற்பட்டதால் No caste, no religion என்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு பெரு முயற்சி எடுத்து வருகிறேன். விரைவில் எனக்கொரு சான்றிதழ் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.