ஹாரர் ரசிகர்களுக்கு செம அப்டேட்: 'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' ரீபூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 1999-ல் வெளியான இப்படம் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது.
The Blair Witch Project
Published on

ஹாரர் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் 1999-ஆம் ஆண்டின் கிளாசிக் திரைப்படமான 'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' தற்போது புதிய பொலிவுடன் ரீபூட் செய்யப்படவுள்ளது.

உலகெங்கிலும் உள்ள திகில் பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வரும் 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லயன்ஸ்கேட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படத்தை டைலன் கிளார்க் இயக்க, கிறிஸ் தாமஸ் டெவ்லின் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார். படத்தின் கதைக்களம் குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், புதிய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில்,

முற்றிலும் புதியதொரு கோணத்தில் இந்த ஹாரர் கிளாசிக் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளதாக லயன்ஸ்கேட் மோஷன் பிக்சர் குழுமத்தின் தலைவர் ஆடம் ஃபோகல்சன் தெரிவித்துள்ளார். இந்த ரீபூட் படம் குறித்த முதல் அறிவிப்பு கடந்த 2024 cinemaCon விழாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 1999-ல் வெளியான அசல் படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களான ஜோசுவா லியோனார்ட் மற்றும் மைக்கேல் சி.வில்லியம்ஸ் ஆகியோருடன், அந்தப் படத்தின் அசல் குழுவைச் சேர்ந்த எட்வர்டோ சான்செஸ், டேனியல் மைரிக் மற்றும் கிரெக் ஹேல் ஆகியோர் இந்த புதிய படத்திற்கு நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

கடந்த 1999-ல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட 'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' அசல் திரைப்படம், உலகளவில் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது. 'பவுண்ட் ஃபுட்டேஜ்' என்ற கேமரா பாணியைப் பயன்படுத்தி, காடுகளுக்குள் மர்மமான முறையில் காணாமல் போகும் மூன்று மாணவர்களின் கதையை தத்ரூபமாக விவரித்து உலகையே மிரட்டிய இந்தத் திரைப்படம், தற்போது மீண்டும் உருவாகி வருவது சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com