

ஆர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ல் வெளியான திரைப்படம் 'ரேணிகுண்டா'
ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் .
சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பித்து ஆந்திராவை அடையும் ஐந்து இளைஞர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்று கிளாசிக் அந்தஸ்து பெற்றது.
ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இயக்குநர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் கடந்த 2017 வெளியான ‘கருப்பன்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தற்போது ரேணிகுண்டா' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'ரேணிகுண்டா 2' உருவாகி வருகிறது. பன்னீர்செல்வம் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குவது மட்டுமல்லாமல், தயாரிக்கவும் செய்கிறார்.
இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ்செல்வம், சுந்தீப், வேல ராமமூர்த்தி, ஹரிஷ் பாரதி, சுஜாதா, சுரபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை தீப்ஷிகா அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனு ரவிச்சந்திரன் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார், ராஜசேகர் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதுகின்றனர்
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்த நிலையில் இப்படத்தின் டீசர் ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துதிருந்தது.
அதன்படி 'ரேணிகுண்டா 2' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக லிங்குசாமி, நெல்சன், வெங்கட் பிரபு, கார்த்தி சுப்பாராஜ் ஆகியோர் இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.