"என் இனிய தமிழ் மக்களே.. விரைவில் சந்திப்போம்" - இயக்குனர் பாரதிராஜா

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் பாரதிராஜா.இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜா
பாரதிராஜா
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரதிராஜா

இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் இனிய தமிழ் மக்களே. வணக்கம் நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

பாரதிராஜா

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வரவேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்." என்று குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com