Suriya-47 அப்டேட்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஜித்து மாதவன்! ஜூலையில் மாஸ் பிளான்?

இது ஒரு பக்கா 'ஆக்ஷன்-காமெடி' திரைப்படமாக உருவாகி வருகிறது.
Suriya 47 Update
Published on

'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' போன்ற மலையாள பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், தற்போது நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 'ழகரம் ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் குறித்த முக்கியத் தகவலை இயக்குநர் ஜித்து மாதவன் தற்போது பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில், இத்திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வதந்திகள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் ஜித்து மாதவன், இத்திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், "திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை, அதற்குள் இத்தனை ஊகங்களா?" என்று அவர் புன்னகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த 2025 டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இது ஒரு பக்கா 'ஆக்ஷன்-காமெடி' திரைப்படமாக, முழுமையான தமிழ் உணர்வோடு உருவாகி வருகிறது. இதில் சூர்யா ஒரு கலகலப்பான மற்றும் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு, இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நேரடியாக நடிக்கும் தமிழ்ப் படம் இதுவாகும். மேலும், 'பிரேமலு' பட புகழ் இளம் நடிகர் நஸ்லென் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார்.

இதுவரை சூர்யா 47 திரைப்படத்தின் தலைப்போ அல்லது அதிகாரப்பூர்வ போஸ்டர்களோ எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வரும் ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட அதிரடி அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com