பாடகி சின்மயி கணவர் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்: குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து மனவேதனை

அடையாளம் தெரியாத எக்ஸ் கணக்கில் இருந்து, ரவீந்திரன்-சின்மயி தம்பதியினரின் குழந்தைகளைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
Rahul Ravindran quits X after murder threat
Published on

திரைப்பட இயக்குநரும் பாடகி சின்மயி கணவருமான ராகுல் ரவீந்திரன், தனது குழந்தைகளை குறிவைத்து எக்ஸ் பக்கத்தில் வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கேதன் அகர்வால் சம்பந்தப்பட்ட புனே கொலை வழக்கு குறித்து எக்ஸ் வலைதளத்தில் விவாதம் எழுந்தது.

அப்போது ஒரு சமூக ஊடகப் பயனர் ராகுலைக் குறிப்பிட்டு, பெண்கள் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை ஆதரித்ததைப் போலவே, ஆண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்குவாரா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராகுல் ரவீந்திரன், சமூகத்தில் ஆணாதிக்க சித்தாந்தம் தொடர்ந்து வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.

அவரது பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதையடுத்து அடையாளம் தெரியாத கணக்கில் இருந்து, ரவீந்திரன்-சின்மயி தம்பதியினரின் குழந்தைகளை கொன்றுவிடுவோம் என மிரட்டல் வந்தது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தான் பிரேசில்-ஜப்பான் கால்பந்து போட்டியின் செய்திகளை பார்ப்பதற்காக மட்டுமே எக்ஸ் செயலியை திறந்ததாகவும், ஆனால் நிலைமை மோசமடைந்து விட்டதாகவும் பதிவிட்டார்.

மேலும் அந்த செய்தி தன்னை உலுக்கி விட்டதாகவும், மிகுந்த வலியாலும் கோபத்தாலும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இணையவழி விமர்சனங்களின்போது தன்னால் அமைதியாக இருக்க முடியும் என்றாலும், இந்த சம்பவம் தன்னை ஆழமாக பாதித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து தான் எக்ஸ் செயலியை விட்டு விலகுவதாகவும், இனி சமூக ஊடகங்கள் தனது மன அமைதியை கெடுக்க அனுமதிக்க போவதில்லை என்றும் பதிவிட்டு, எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com