'She lands like squirrel': 'Super girl' போஸ் குறித்த ரகசியத்தை உடைத்த மில்லி அல்காக்!

'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' தொடரின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் மில்லி அல்காக்
She lands like squirrel'-'Super girl
Published on

டிசி சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிக முக்கியமான வரவிருக்கும் திரைப்படமான 'சூப்பர்கர்ள்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் மில்லி அல்காக், தனது கதாபாத்திரத்தின் மாஸான 'சூப்பர்ஹீரோ லேண்டிங் போஸ்' உருவானதன் பின்னணியில் உள்ள ஒரு வேடிக்கையான கதையைப் பகிர்ந்துள்ளார்.

நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வரும் இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக, பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'தி டுநைட் ஷோ ஸ்டாரிங் ஜிம்மி ஃபாலன்' நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது தொகுப்பாளர் ஜிம்மி ஃபாலன், போஸ்டர்களில் இருக்கும் அவரது மாஸான சூப்பர்ஹீரோ போஸ் எப்படிக் கிடைத்தது என்று கேட்க, அதற்குப் பதிலளித்த மில்லி அல்காக், உண்மையில் படத்தில் தான் அந்தப் போஸை வைக்கவே இல்லை என்றும், அது வெறும் போஸ்டருக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என்றும் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து அந்த போஸ் உருவான விதம் குறித்துப் பேசிய அவர், தான் நடித்த 'சைரன்ஸ்' தொடரின் ஸ்டில் போட்டோகிராஃபர் தான் இந்த ஐடியாவைக் கொடுத்ததாகக் கூறினார். படப்பிடிப்பின் போது உங்களுக்கான பிரத்யேக லேண்டிங் போஸ் என்ன என்று அந்தப் புகைப்படக் கலைஞர் கேட்க, தனக்குத் தெரியாது என்று மில்லி கூறியுள்ளார்.

அதற்கு அவர், அணில்கள் மரத்திலிருந்து தரையில் குதிக்கும்போது எப்படித் தரையிறங்குமோ, அதேபோல உங்கள் போஸ் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். முதலில் இது மில்லிக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், கூகுளில் 'அணில்கள் எப்படித் தரையிறங்கும்' என்று தேடிப் பார்த்தபோதுதான் அதன் நுணுக்கம் அவருக்குப் புரிந்துள்ளது.

அணில்கள் காற்றில் சுழன்று, அதிர்ச்சியைத் தாங்குவதற்காகத் தங்களது கால்களை அகலமாகப் பரப்பி, கைகளை முன்னோக்கி நீட்டி ஒரு சூப்பர்ஹீரோ போலவே தரையிறங்கும் என்பதை அறிந்து வியந்துள்ளார். நிகழ்ச்சியில் அணிலின் படத்தையும், மில்லியின் சூப்பர்கர்ள் போஸ்டரையும் ஒப்பிட்டுக் காட்டியபோது அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' தொடரின் மூலம் உலகப் புகழ்பெற்ற மில்லி அல்காக் நடிப்பில், கிரெய்க் கில்லெஸ்பி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தற்போது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com