ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ விமர்சனம்!
ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ விமர்சனம்!(3 / 5)
90-களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள அனந்தன் காடு, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளி ஆர்யாவை மையமாகக் கொண்டு நகர்கிறது. கேரளாவின் குடிசைப்பகுதியில் வசிக்கும் சிலர் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில், அரசியல் மற்றும் அதிகார பின்னணியில் நடைபெறும் ஒரு கொலை சதியில் ஆர்யா எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்.
ஒரு செல்வந்தரின் கொலை, அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், ஆர்யாவின் கடந்த காலம், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வாழ்க்கை என பல கதைகள் ஒன்றோடொன்று இணைந்து பயணிக்கின்றன. இறுதியில் அந்த கொலைக்கான காரணம் என்ன? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழீழப் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்யா, தோற்றத்திலும் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியிருப்பவர், அமைதியான காட்சிகளிலும் கதாபாத்திரத்தின் வலியை நன்றாக கடத்தியிருக்கிறார்.
முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத் ஆகியோர் நடித்துள்ள குடிசைப்பகுதி நண்பர்கள் குழு படத்திற்கு உணர்வுப்பூர்வமான பலத்தை சேர்க்கிறது. சுனில், விஜயராகவன், ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் முரளி கோபி, அரசியல், அதிகாரம், குற்ற உலகம் மற்றும் தமிழீழ பின்னணி ஆகியவற்றை இணைத்து வித்தியாசமான கதையை உருவாக்க முயற்சித்திருக்கிறார். திரைக்கதை பல இடங்களில் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், சில கதாபாத்திர வடிவமைப்புகளும், சில சம்பவங்களும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.
இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார், படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் மேக்கிங் தரமாக இருக்கிறது. ஆனால் சில இடங்களில் தேவையற்ற துணைக் கதைகளும், அதிகமான கதாபாத்திரங்களும் கதையின் மையத்தை விட்டு விலகச் செய்கின்றன.
முதல் பாதி முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் அரசியல் திருப்பங்களுடன் வேகம் பிடிக்கிறது.
எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு 90-களின் காலகட்டத்தை இயல்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறது. அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை ஆக்ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது.

