

தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனும் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண் தீவிர ஐயப்ப பக்தர் ஆவார். அடிக்கடி விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என் தந்தையின் அறிவுரையின்படி 17 வயதில் நான் ஐயப்ப விரதத்தை தொடங்கினேன். இந்த விரதம் என் வாழ்வின் ஒழுக்கத்தை அதிகரித்தது. என் எண்ணங்களை கட்டுப்படுத்த உதவியது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி மன அமைதியை பெற எனக்கு பெரிதும் உதவியது. என் தந்தையிடம் இருந்து கடின உழைப்பின் தத்துவத்தை நான் பெற்றேன். மற்றவர்கள் 50 மணி நேரம் உழைத்தால் நீ 100 மணி நேரம் உழை என்பது என் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்த கொள்கை. இப்போது நான் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு பொறுப்பான தந்தையாக இருப்பது எனது முதல் முன்னுரிமை.
என் பிள்ளைகள் வீட்டில் சேட்டை செய்வதை பார்க்கும்போது நான் அவர்களை இன்னும் அதிகமாக ஊக்குவிப்பேன். அவர்களைக் குதிக்க விடுவேன். கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நிற்பதை உறுதி செய்வேன். சேற்றில் விளையாடினாலும் ஏறி இறங்கினாலும் எனக்கு பயமில்லை. சிறு வயதில் இருந்தே அவர்கள் தைரியத்துடனும், துணிச்சலுடனும் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களின் அம்மா மிகவும் மென்மையாக கவனித்துக் கொள்வார். குழந்தைகளைப் பற்றி மிகவும் கவலைப்படுவார். அம்மா அவர்களை திட்டும் போதெல்லாம் கிளிங்கரா என்னிடம் வருவாள்.
இவ்வாறு அவர் கூறினார்.