

தனது வரவிருக்கும் திரைப்படமான 'அனந்தன் காடு' படத்தின் விளம்பரத்திற்காக ஆர்யா அண்மையில் 'கேரளா' ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்தார். அப்போது, 2013-ல் அட்லீ இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா நடித்ததன் பின்னணி குறித்துப் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
'ராஜா ராணி' கதை இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட ஒரு கதையாகவே வடிவமைக்கப்பட்டது. படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், முன்னணி மற்றும் பிரபலமாக இருந்த பல கதாநாயகிகள் மற்றொரு நாயகி இருப்பதைக் கண்டு ஏற்பட்ட தயக்கத்தால் இந்தத் திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். மேலும், அப்போது அட்லீ ஒரு புதிய இயக்குநராக இருந்ததும், பல நடிகைகள் சிறு காரணங்களைக் கூறி விலகக் காரணமாக அமைந்தது.
2010-ல் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளியில் இருந்தார். இந்நிலையில் தான் இந்த கதாபாத்திரத்திற்காக நயன்தாராவை அணுக ஆர்யா முடிவு செய்துள்ளார். "நான் சும்மா ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்றுதான் நயன்தாராவிடம் பேசினேன்.
'இப்படி ஒரு கதை இருக்கிறது, நீங்கள் மீண்டும் படங்களில் நடிக்கத் திட்டமிட்டிருந்தால் இதைக் கொஞ்சம் பரிசீலியுங்கள்' என்று கூறினேன். கதையைக் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறிய நயன்தாராவுக்கு, கதை மிகவும் பிடித்துப்போனதால் உடனடியாக ஓகே சொன்னார்" என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் கம்பேக் திரைப்படமாக அமைந்த 'ராஜா ராணி', அவரது திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, அவரை 'லேடி சூப்பர்ஸ்டார்' என்ற அந்தஸ்திற்கு இட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.