புரவியாட்டம்- திரை விமர்சனம்
புரவியாட்டம்- விமர்சனம்(2 / 5)
கிராமப்புற தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான பொய்க்கால் குதிரை ஆட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் புரவியாட்டம். இந்த கலை வடிவத்தை வாழ்வாகக் கொண்ட கலைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள் மற்றும் அந்தக் கலையை பாதுகாக்கும் முயற்சிகளே படத்தின் மையம்.
நாயகன் அர்ஜு, மற்றும் நாயகி சிம்ரன் அதானி இருவரும் காதலித்து வருகிறார்கள். அந்த ஊரில் திருவிழாவின்போது இருவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆட திட்டம் போடுகிறார்கள். ஆனால் அர்ஜுவின் உறவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அதே சமயம் அந்த பொய்க்கால் குதிரையில் ஒரு அமானுஷ்ய சக்தியும் இருக்கிறது. இறுதியில் அர்ஜு, ஊர் திருவிழாவில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினாரா? உறவினர் எதிர்க்க காரணம் என்ன? பொய்க்கால் குதிரையில் இருக்கும் அமானுஷ்யம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அர்ஜு, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், காமெடி, குதிரை ஆட்டம் என அனைத்திலும் ஸ்கோர் செய்ய முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் அதானி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆர்.சுந்தரராஜன், கஞ்சா கருப்பு ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
பொய்க்கால் குதிரை கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம், பாரம்பரியம் மெல்ல மெல்ல மறைந்து போகும் நிலை ஆகியவற்றை படம் நேர்மையாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் விநாயகா சுப்ரமணியன்.
இயக்குனர், ஆவணப்பட பாணியில் கதையை இயக்கி இருக்கிறார். மெதுவாக நகரும் திரைக்கதையும், சுவாரசியமான காட்சிகள் இல்லாததும் வருத்தம்.
ஔிப்பதிவு
மகாதேவன் சுப்ரமணியன் ஒளிப்பதிவு கிராமப்புற சூழலையும், கலைஞர்களின் அன்றாட வாழ்க்கையையும் நெருக்கமாக காட்டுகிறது.
இசை
கணேஷ் ராகவேந்திரா பின்னணி இசை மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்டாலும், காட்சிகளின் உணர்வை பாதிக்காமல் பயணிக்கிறது.

