கோடை விடுமுறையை கொண்டாட வரும் படங்கள்... Summer Vacation

ஏப்ரல் 30-ந்தேதி முதல் மே இறுதிக்குள் சுமார் 10 புதிய படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை விடுமுறையை கொண்டாட வரும் படங்கள்... Summer Vacation
Published on

கோடை விடுமுறையையொட்டி திரை உலகை பொறுத்தவரை முன்னணி கதாநாயகர்கள் நடிப்பில் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் வருவதால் புதிய படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. காரணம் தேர்தல் நேரங்களில் பொதுமக்களின் மொத்த பார்வையும் தேர்தல் மீதே இருக்கும். மேலும் தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதும் குறைவாகதான் இருக்கும்.

இதை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் தேர்தலுக்கு பின்னரே வெளியாக இருக்கின்றன. சிறிய பட்ஜெட் படங்கள் பல திரைக்கு வர இருக்கிறது. கோடை விடுமுறையில் என்னென்ன புதிய படங்கள் வெளியாக இருக்கின்றன என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனநாயகன், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெய்ன் போன்ற படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. தனுஷ் நடித்துள்ள கர படம் ஏப்ரல் 30-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு தேர்தலுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ஜனநாயகன் படமும் கோடை விடுமுறையில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொங்கல் விடுமுறையையொட்டி திரைக்கு வருவதாக இருந்த ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மறு தணிக்கை செய்யப்படும் நிலையில் ஜன நாயகன் படத்தை சென்சார் அதிகாரிகள் இன்று பார்க்க இருக்கின்றனர்.

மறு தணிக்கைக்கு பின்னர் ஜனநாயகன் படம் திரைக்கு வருவது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. ஜனநாயகன் படம் வெளியீட்டை பொறுத்தே மற்ற படங்களின் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 30-ந்தேதி முதல் மே இறுதிக்குள் சுமார் 10 புதிய படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 19-ந்தேதி கென் கருணாஸ் இயக்கத்தில் யூத் படம் திரைக்கு வருகிறது. 27-ந்தேதி ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஹேப்பிராஜ் படம் திரைக்கு வருகிறது. மேலும் சிறு பட்ஜெட் படங்களும் திரைக்கு வர இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com