NIzhal Tamil Movie

நிழல்- திரை விமர்சனம்

மோகன் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான அளவிலேயே அமைந்துள்ளது.
Published on
நிழல்- விமர்சனம்(2.5 / 5)

கதை

தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் விஜய் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை பிக்பாஸ் ஜனனி கொடூரமாக தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். தனது மகன் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தியது ஏன் என்பதை கண்டுபிடிக்க விஜய் ஹரியின் தாய், காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் விசாரணையை தொடங்குகிறார்.

அப்போது ஜனனியின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய குற்றம் ஒன்று நடைபெற்றிருப்பதும் தெரியவருகிறது.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல, ஜனனி அப்படி செய்ய காரணம் என்ன? உண்மையில் நடந்தது என்ன? நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிக்பாஸ் ஜனனி, இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருப்பதோடு, குறிப்பாக மருத்துவராக வரும் கதாபாத்திரத்தில் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். மற்றொரு கதாபாத்திரத்தில் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனனிக்கு ஜோடியாக நடித்திருக்கும் விசாகனுக்கு படத்தின் பெரும்பகுதியில் பெரிய வேலை இல்லை என்றாலும், கிளைமாக்ஸில் வக்கீலாக வரும் காட்சிகளில் ஓரளவு ரசிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் விஜய் ஹரி மற்றும் அவரது நண்பர்கள், கதைக்கு தேவையான கொடூரத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனனியின் தந்தையாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, வழக்கம்போல பாசமிக்க தந்தையாக மனதில் நிற்கிறார்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் பல கதாபாத்திரங்களில் சீரியல் நடிகர்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கிறார்கள். அபிஷேக், சபீதா ஆனந்த், சிவன் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தாலும், அவர்களது நடிப்பில் சீரியல் சாயல் அதிகமாக இருப்பது படத்திற்கு பலவீனமாக மாறியுள்ளது.

இயக்கம்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறல் மற்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் அந்த கருவை வலுவான திரைக்கதையாக மாற்றுவதில் தடுமாறியிருக்கிறார். கடைசி சில நிமிடங்களில் வரும் திருப்பங்கள், நீதிமன்ற காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் மட்டுமே படத்திற்கு ஓரளவு பலம் சேர்க்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

இசை

அபுபக்கரின் இசை ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது.

ஔிப்பதிவு

மோகன் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான அளவிலேயே அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com