மலையாள சினிமா: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சினிமா புரொடக்சன் மேலாளர் மர்ம சாவு

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து வரவழைத்து பாலியல் வன்கொடுமை.திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மலையாள சினிமா: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சினிமா புரொடக்சன் மேலாளர் மர்ம சாவு
Published on

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கையில் அம்பலமானது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபல நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்களான ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

சினிமா புரொடக்சன் மேலாளரான திருவனந்த புரத்தை சேர்ந்த ஷானு இஸ்மாயில் என்பவரின் மீதும் வழக்கு பதியப்பட்டது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்கு பதிந்திருந்தனர்.

அதன்பேரில் போலீசாரும், நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சினிமா புரொடக்சன் மேலாளர் ஷானு இஸ்மாயில் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

அவர் தங்கியிருந்த அறை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. மேலும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்த னர். அதன்பேரில் எர்ணாகுளம் மத்திய போலீசார், ஷானு இஸ்மாயில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தனர்.

அவர் தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஷானு இஸ்மாயில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை புகாரின் பேரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சினிமா புரொடக்சன் மேலாளர் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com