

ஆன்மீக தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி, 'நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்' என்கிறது. சுருக்கமாக 'விதைத்ததையே அறுப்பாய்' என்கிறது.
அறிவியல் ரீதியாகப் பார்க்கும் போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்று கூறுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித் தான் 'அறுவடை' படம் பேசுகிறது.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான் 'என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் 'அறுவடை'. இந்தப் படத்தை எம்.கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். கார்த்திகேசன் தயாரித்துள்ளார். படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக வேடமேற்று நடித்தும் இருக்கிறார்.
இவர் ஏற்கெனவே 'லாரா' படத்தைத் தயாரித்திருந்தார். அதில் அவர் ஏற்றிருந்த போலீஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. ஒரு நடிகராக அவர் 'ஒண்டிமுனி' என்கிற படத்திலும் வில்லனாக நடித்து கவனத்தை பெற்றவர். இந்தப் படத்திற்கு பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே.கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
'அறுவடை' படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிந்தைய தொழில்நுட்ப மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்தப் படத்தை கோடை விடுமுறையை ஒட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.