சூர்யா-டி.ஜே.ஞானவேல் கூட்டணியில் புதிய படம்: 'Hombale Films' தயாரிப்பில் பிரம்மாண்ட அறிவிப்பு!

"மூன்று தசாப்தங்களாக திரையில் உண்மையை விதைத்தவர். "
New Film in Suriya-TJ Gnanavel
Published on

'ஜெய் பீம்' படத்தின் மாபெரும் விமர்சன ரீதியான வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளனர். இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான "ஹோம்பாலே பிலிம்ஸ்" இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

சூர்யாவின் சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான 'கருப்பு' திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்த புதிய மெகா ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் சூர்யா ஜோடியாக காயடு லோஹர் நடிக்கிறார்.

திரையுலக வட்டாரங்களின்படி, தற்காலிகமாக 'சூர்யா 48' என்று அழைக்கப்படும் இத்திரைப்படம், தமிழகத்தின் புகழ்பெற்ற மறைந்த மாமனிதர் "5 ரூபாய் மருத்துவர்" டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சூர்யாவின் சொந்த நிறுவனமான 'ழகரம் ஸ்டுடியோஸ்' இத்திரைப்பட உருவாக்கத்தில் இணைந்துள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' படத்திற்குப் பிறகு, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் மீண்டும் சூர்யாவுடன் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், "மூன்று தசாப்தங்களாக திரையில் உண்மையை விதைத்தவர். கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர். இந்த தலைமுறையின் மிகத் துணிச்சலான நடிகர், இப்போது தனது மிகப்பெரிய மேடையில் கால் பதிக்கிறார்!" என சூர்யாவைப் பாராட்டி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இன்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com