Nagabandham Movie Review

நாகபந்தம்- திரை விமர்சனம்

ஜுனைத் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்துள்ளன.
Published on
நாகபந்தம் - விமர்னசம்(2.5 / 5)

கதை

1756-ம் ஆண்டு ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள பழமையான ரங்கநாதர் கோவிலில் பாதுகாக்கப்படும் பிரம்ம கமலம் என்ற தெய்வீக மலரை கைப்பற்றுவதற்காக அப்போது நடைபெற்ற கொடூர தாக்குதலே கதையின் தொடக்கம்.

பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த மலர், அளவில்லாத சக்தியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதை கைப்பற்ற அப்தாலி மற்றும் பைராகி தலைமையிலான சக்திகள் முயற்சி செய்கின்றன.

அந்த மலரையும், கோவிலின் புனிதத்தையும் காப்பாற்றும் பொறுப்பு நாயகன் விராட் கர்ணா மீது விழுகிறது. சாதாரண மனிதராக வாழும் அவர், சூழ்நிலையின் காரணமாக தர்மத்தை காக்கும் போராளியாக மாறுகிறார். பிரம்ம கமலத்தை கைப்பற்ற நினைக்கும் சக்திகளுக்கும், அதை பாதுகாக்க போராடும் விராட் கர்ணாவுக்கும் இடையிலான மோதலே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விராட் கர்ணா, ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளில் கம்பீரமாக தோன்றியிருக்கிறார். பல காலகட்டங்களில் பயணிக்கும் கதாபாத்திரத்தை உடல்மொழி மற்றும் திரை இருப்பின் மூலம் வலிமையாக வெளிப்படுத்தியிருந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான ஆழம் குறைவாகவே தெரிகிறது. இருப்பினும், ஆக்‌ஷன் ஹீரோவாக தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் மற்றும் நபா நடேஷ் இருவருக்கும் பெரிய அளவில் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லை. கதாநாயகனைச் சுற்றியே திரைக்கதை நகர்வதால், இருவரும் பாடல் மற்றும் குடும்பக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவில் அர்ச்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா தனது அனுபவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். தொல்லியல் நிபுணராக நடித்திருக்கும் ஜெகபதி பாபு கம்பீரமான திரை இருப்பால் கதைக்கு பலம் சேர்க்கிறார்.

அனசுயா பரத்வாஜ், சரண்யா பொன்வண்ணன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஜான் கொக்கன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை. வில்லன்களாக நடித்திருக்கும் கருடா ராம் மற்றும் ரிஷப் சாவ்னே ஆகியோரின் கதாபாத்திரங்களும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இயக்கம்

புராணம், பக்தி, ஃபேண்டஸி மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றை இணைத்து வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் அபிஷேக் நாமா, ஆரம்பத்தில் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தினாலும், இடைவேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் வன்முறைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் திரைக்கதை சோர்வடைகிறது.

முக்கியமாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் மதத்தையும் மையப்படுத்திய காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையின் தேவையை தாண்டி இடம் பெற்றிருப்பது படத்திற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை காட்சிகள் அளவுக்கு அதிகமாக இடம்பெற்றிருப்பதும், அவை கதைக்கு அவசியமானதாக தெரியாமல் போவதும் படத்தின் பலவீனமாக இருக்கிறது.

ஒளிப்பிதிவு

ஒளிப்பதிவாளர் சவுந்தர் ராஜன், பிரம்மாண்டமான அரங்குகள், கோவில் வளாகங்கள் மற்றும் ஃபேண்டஸி உலகத்தை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசை

ஜுனைத் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com