"முருகப்பெருமான் வடக்கில் பிறந்தவர்"- சர்ச்சையில் சிக்கிய ஜூனியர் என்.டி.ஆர்

திரிவிக்ரம் படத்தின் போஸ்டர், தமிழ் மக்களிடையே கடும் விமர்சங்களையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது.
Movie
Published on

முருகப்பெருமானை அடிப்படையாக கொண்ட ஒரு புராணக் கதையை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இப்படத்தை, ஹாரிகா & ஹாசின் கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் எஸ். ராதாகிருஷ்ணா மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் நந்தமுரி கல்யாண் ராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

"என்.டி.ஆர்-திரிவிக்ரம்” என குறிப்பிட்டு இப்படத்தின் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முருகப்பெருமானாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முருகப்பெருமானின் வரலாறு, மறுபிறவி போன்ற கதைக்களமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முருகப்பெருமானின் தெய்வீக வேல், கதையின் முக்கிய அம்சமாக வலம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாகா வம்சி வெளியிட்ட தனது எக்ஸ் தள பதிவில், "வடக்கில் பிறந்தவர். இதய மண்ணில் உருவாக்கப்பட்டவர். தெற்கில் வழிபடப்பட்டவர். இப்போது, இந்தப் பிரபஞ்சத்திற்கே உரித்தான ஒரு கதை" என்ற தலைப்புடன் படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்களிடையே கடும் விமர்சங்களையும் எதிர்ப்பையும் தூண்டியது.

முருகப்பெருமான் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்றும், அவர் ஒரு தமிழ்க் கடவுள் என்றும் தங்கள் படத்திற்காக "வரலாற்றை மாற்ற வேண்டாம்" என்று தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும் தமிழ்நாட்டில் தான் உள்ளது, வேறு மாநிலங்களில் இல்லை என்றும் ஒரு சிலர் சுட்டிக்காட்டினார். இது "தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் திரிக்கும் ஒரு அப்பட்டமான முயற்சி" என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மற்றொரு பிரிவினர் முருகன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பக்தர்களால் வணங்கப்படுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டி, தயாரிப்பாளர்களை ஆதரித்தனர். "தெலுங்கு மாநிலங்களிலும் கர்நாடகாவிலும் அவர் சுப்ரமணிய சுவாமியாகவும், வட இந்தியாவில் கார்த்திகேயன் ஸ்கந்தனாகவும் வணங்கப்படுகிறார். தமிழர்கள் அவரை அதிகமாக வணங்குவதால் மட்டுமே அவர் ஒரு தமிழ்க் கடவுள் ஆகிவிட மாட்டார்," என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதுவரை, இந்த விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தங்கள் தரப்பில் எந்த கருத்தும் கூறவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com