மரகத மலை– திரைவிமர்சனம்

மரகத மலை– திரைவிமர்சனம்

குழந்தைகளுக்கான ஒரு ஃபேண்டஸி கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் லதா.
Published on
மரகத மலை– விமர்சனம்(3 / 5)

ஜமீன்தாராக இருக்கும் மசந்தோஷ் பிரதாப் தனது மனைவி தீப்ஷிகா மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஜமீந்தாரின் முன்னோர்கள் முதல் தற்போது இருக்கும் சந்தோஷ் பிரதாப் வரை மரகதமலையில், தங்கம் மற்றும் வைரம் போன்ற அளவிட முடியாத செல்வங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் அந்த மலையை அடையும் ரகசிய குறிப்பையும் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்த குறிப்பை கைப்பற்ற கொள்ளை கும்பல் ஊருக்குள் வர, சந்தோஷ் பிரதாப் அதை மனைவி தீப்ஷிகாவிடம் கொடுத்து தப்பிக்கச் சொல்கிறார். தீப்ஷிகா தனது மகனுடன் காட்டிற்குள் தஞ்சம் அடைகிறார். காட்டிற்குள் நடக்கும் சம்பவங்களில், மகனை இழப்பதுடன் குறிப்பையும் தவறவிடுகிறார்.

அதே நேரத்தில் முனிவரின் சாபத்தால் தீப்ஷிகா கல்லாக மாறுகிறார். மறுபுறம், மகனை பலி கொடுக்க நினைக்கும் ராட்சசன் அவனை கடத்திச் செல்கிறான். மனைவி மற்றும் மகனை தேடி சந்தோஷ் பிரதாப் காட்டிற்குள் வருகிறார்.

இறுதியில் சந்தோஷ் பிரதாப் மனைவி தீப்ஷிகா மற்றும் மகனை கண்டு பிடித்தாரா? கல்லாக மாறிய தீப்ஷிகா மீண்டும் மனிதராக மாறினாரா? கடத்தப்பட்ட மகன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சந்தோஷ் பிரதாப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் அவர் தனது பங்கை சரியாக செய்துள்ளார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் பாடலில் நடன ஆடி கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீப்ஷிகா, அழகும் உணர்வும் கலந்த நடிப்பை கொடுத்துள்ளார். தம்பி ராமையா, ஜெகன் ஆகியோரின் காமெடி காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கான கதாபாத்திரங்களை அளவாக செய்து முடித்துள்ளனர்.

இயக்கம்

குழந்தைகளுக்கான ஒரு ஃபேண்டஸி கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் லதா. கதை நகர்வு எளிமையாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மனித குரங்கு, புலி, டிராகன் போன்ற அம்சங்கள் குழந்தைகளை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லாஜிக் இல்லாமல் பார்த்தால் படத்தை ரசிக்கலாம்.

ஔிப்பதிவு

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. காட்சியமைப்புகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இசை

எல்.வி.முத்து கணேஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com