

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் "மைத்ரி தமிழ் 03" என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
`கொட்டுக்காளி’, `விடுதலை’, `மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். `இன்று நேற்று நாளை’ மற்றும் `அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த `குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த `டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ஆர். ரவிகுமாருடன் நடிகர் சூரி இணைந்துள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவை படக்குழு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இத்தகவல் குறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.