

கேரள திரைப்பட வர்த்தக சபை (KFCC) தலைவர் அனில் தாமஸ், கேரளாவின் திரைப்படம், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பி.சி.விஷ்ணுநாத் அவர்களை திருவனந்தபுரத்தில் சந்தித்து, மலையாள திரைப்படத் துறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் திரைப்படங்களின் மீதான வரிவிதிப்பு, ஆன்லைன் கடற்கொள்ளை (digital pricy), தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனில் தாமஸ், திரைப்படத் துறையை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார். பைரசி மற்றும் பிற துறைசார் சவால்களை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், “திரைப்படத் துறையின் அனைத்து பங்குதாரர்களும் ஒன்றாக இணைந்து அரசுடன் இவ்வளவு விரிவான கலந்துரையாடல் நடத்துவது இதுவே முதல் முறை. அரசின் அணுகுமுறையும் தலையீடும் மிகவும் சாதகமாக இருந்தது. குறிப்பாக திரைப்பட கடற்கொள்ளையை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
சமீப காலங்களில் மலையாளத் திரைப்படங்கள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவது அதிகரித்துள்ளதால், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் பைரசிக்கு எதிராக வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு அவசியம் என திரைப்படத் துறை வலியுறுத்தி வருகிறது. இந்தச் சந்திப்பு, மலையாள திரைப்படத் துறையின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.