ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இணைந்து பாடிய காதல் பாடல்

சிவாங்கி, சந்தோஷ் பாலாஜி மற்றும் சம் விஷால் ஆகியோரும் பாடல்கள் பாடியுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இணைந்து பாடிய காதல் பாடல்
Published on

துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பனையேறி” குறும்படத்தை தயாரித்த திசையன்விளையை சேர்ந்த டி.பி. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் தற்போது ‘தமிழினி’ என்ற புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர்.

படத்தில் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின், சத்ரியன் படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சன் மியூசிக் தொகுப்பாளரும், பிரபல யூடியூபரும் ஆன விஜே ஆசிக் ஒரு கதாநாயகனாகவும், ‘ராயல் சல்யூட்’ படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.

கதாநாயகிகளாக ஷாஷா சிவகுமார் மற்றும் புஷ்ப லதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் டி.பி.சரவணனும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘பனையேறி’ குறும்படத்தின் மூலம் தென் மாவட்ட பனையேறும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த இந்த படக்குழு, ‘தமிழினி’ திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.

படத்திற்கு சந்தோஷ் பாலாஜி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். மேலும் சிவாங்கி, சந்தோஷ் பாலாஜி மற்றும் சம் விஷால் ஆகியோரும் பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், “தமிழினி” திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com